சென்னை: தி முகவினர் பேசினால் கருத்துரிமை, எதிர்க்கட்சிகள் பேசினால் அவமதிப்பா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். கலைஞரைப் பற்றி தவறாக பாடியதால் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளார்கள். நான் பாடுகிறேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்தார்.
ஏற்கனவே உச்சநீதிமன்றம்,. “அரசியலமைப்புச் சட்டத்தின் 19(1)(a)-ன் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் மற்றும் அவற்றின் மீதான நியாயமான கட்டுப்பாடு களின் வரம்புகள் ஆகியவற்றைப் பற்றி நமது காவல் துறைக்கு கல்வி கற்பிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசியதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே அரசை விமர்சிப்பவர்களை கைது செய்வது தவறு என்று உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் சாட்டை முருகனை கைது செய்துள்ளது. தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் இருந்த சாட்டை முருகனை, திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர், சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, சாட்டை துரைமுருகன் பேசியதில் என்ன தவறு? பேசியதற்காக கைது செய்வீர்கள் என ஆவேசமாக கேள்வி எழுப்பியதுடன், சாட்டை துரைமுருகன் பேசியதையே நானும் பேசுகிறேன்.. என்னை கைது செய்வீர்களா? என திமுக அரசுக்கு சவால் விடுத்தார்.
மேலும், சாட்டை துரைமுருகன் குற்றாலம் போகவில்லை. அவரது ஊரில் அடுத்த வாரம் திருவிழா. அதற்காக போனவர்தான். கள்ளச்சாராயம் விற்றவன், 31 நாட்களில் 131 கொலை நிகழ்ந்துள்ளது; தம்பி ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பின்னரே இது தெரிய வருது.
மரக்காணம், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து எவ்வளவு பேர் மரணம்? இதற்கு பிறகும் விக்கிரவாண்டியில் நேற்று கள்ளச்சாராயம் குடித்து எத்தனை பேர் பாதிப்பு? புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எப்படி சாராயம் வருது? எங்க வண்டிகளை எத்தனை இடத்தில் சோதனை போடுகிறீர்கள்? அதை மீறி எப்படி வரும்? என சரமாரியாககேள்வி எழுப்பியவர்,
கொலைகாரர்கள், சாராய ஆலை அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் கொலையை எப்படி தடுக்க முடியும்? கள்ளச்சாராயத்தை எப்படி தடுக்க முடியும்? இவர்கள் மீது எல்லாம் பாயாத வழக்கு, சட்டம், கைது பேசியதற்காக துரைமுருகனை கைது செய்வதா? என்றவர், எதற்காக சாட்டை துரைமுருகனை கைது செய்தீர்கள்? என்னைவிட பேசிவிட்டாரா துரைமுருகன்?
அதிகாரத்தில் இருக்கிற பவர்புல் கிங்தானே நீங்க.. என்னையை கைது செய்யுங்க பார்க்கலாம்? என்னை சுற்றி இருக்கிறவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுப்பதுதானே..
சாட்டை துரைமுருகன் முன்னாள் முதல்வர் கருணாநிதியை எங்கே அவதூறு செய்து பேசினார்? அவர் பாடியது ஏற்கனவே இருந்த பாட்டுதானே? எழுதினவன், பாடினவனை விட்டுவிட்டு எடுத்து பாடியவரை ஏன் கைது செய்றீங்க? நானும் அதே பாட்டை இதோ பாடுகிறேன்…. இப்ப நான் பாடிட்டேன் என்னை கைது செய் பார்ப்போமே..
நீ புள்ள பூச்சிய பிடிச்சு விளையாடுவ.. தேள், பாம்பு, நட்டுவாகளியை பிடிச்சு விளையாடேன்.. நாங்க பேசினால் அவமதிப்பா?
முன்னாள் முதல்வர் கருணாநிதியை பேசவே கூடாதா? திமுகவினர் பேசாத பேச்சா பேசுகிறோம்?
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பற்றி இப்போதைய முதல்வர் ஸ்டாலின் பேசியதை எல்லாமேடுத்து அனுப்பட்டா?
நீங்க பேசுவது கருத்துரிமை; நாங்க பேசினால் அவமதிப்பா? முடிந்தால் என்னை கைது செய்யுங்களேன்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.