டெல்லி: நாடு முழுவதும் நீட் சர்ச்சை பிரளயத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த முறைகேட்டின் மூலாதாரமாக செயல்பட்டது, குஜராத்தின் கோத்ரா பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி என்பது தெரிய வந்துள்ளது.
நீட் தேர்வில் மாணவர்கள் தேர்வை முடித்த பின்னர் விடையளிக்காத கேள்விகளுக்கு ஓ.எம்.ஆர் தாளில் விடைகளை நிரப்புவதற்காக பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த பள்ளியை சிபிஐ ரவுண்டப் செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதை 23 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதிய நிலையில், ஜூன் 4ஆம் தேதி திடீரென தேர்வு முடிவுகள் வெளியானது. ஆனால், அதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளதாக சர்ச்சை எழுந்தது. நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்துள்ளதாகவும், கருணை மதிப்பெண் விவகாரம், ஒரே பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்றது என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் எழுந்தது.
இதனிடையே, இளநிலை நீட் தேர்வில் மோசடியில் ஈடுபட்டதாக முதற்கட்டமாக 110 மாணவர்களை தேசிய தேர்வு முகமை தகுதிநீக்கம் செய்துள்ளது. இவர்களில் 40 மாணவர்கள் குஜராத் மாநிலத்தையும், 17 மாணவர்கள் பீகார் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், கோத்ரா ஜெய் ஜலராம் பள்ளியும், ஜெய் ஜலராம் அறக்கட்டளையால் நடத்தப்படும் கேதா மாவட்டத்தில் உள்ள பாடல் பகுதியில் உள்ள பள்ளியும், மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான மையங்களாக நியமிக்கப்பட்டு இருந்ததாகவும், இங்கிருந்துதான் முறைகேடுகள் தொடங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சி.பி.ஐ விசாரணையின்படி, பள்ளியின் முதல்வர் புர்ஷோத்தம் மகாவீர்பிரசாத் சர்மா மற்றும் புவியியல் ஆசிரியர் துஷார் ரஜினிகாந்த் பட் உள்பட பள்ளியின் ஊழியர்கள் தேர்வுக்குப் பிறகு முழுமையடையாத ஓ.எம்.ஆர் (OMR) தாள்களை நிரப்புவதற்கு மாணவர்களுக்கு உதவ முயன்றதாகக் கூறப்படுகிறது,
இதன் காரணமாக, ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தீட்சித் படேல் மற்றும் பள்ளியின் முன்னாள் தற்காப்புக் கலை ஆசிரியர் ஆரிப் வோஹ்ரா, முதல்வர் சர்மா மற்றும் புவியியல் ஆசிரியர் துஷார் பட் உட்பட ஆறு பேர் இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். புர்ஷோத்தம் சர்மா ஆங்கில வழிப் பள்ளியின் முதல்வராகவும், கேட்கி படேல் குஜராத்தி வழிப் பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். கேட்கி படேலின் வாக்குமூலத்தையும் சி.பி.ஐ பதிவு செய்துள்ளது.
நீட் தேர்வில் தங்கள் குழந்தைகள் தேர்ச்சி பெற உதவுமாறு குற்றம் சாட்டப்பட்டவர்களை அணுகியதாகக் கூறப்படும் 26 பெற்றோர்களும் சி.பி.ஐ.,யால் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து கூறிய அந்த பகுதி சமூக ஆர்வலர் ஒருவர், இவர்களின் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விளம்பரங்களில், பள்ளியில் உள்ள வழக்கமான கல்வியுடன் ஜே.இ.இ/ நீட் (JEE/NEET) பயிற்சி வழங்கப்படும் என்றும், அதன்மூலம் மருத்துவ படிப்பு உறுதி செய்யப்படும் வகையில் என விளம்பரங்கள் வெளியிட்டது என்றும் கூறியிருக்கிறார். இதற்காக தனியாக ஆண்டுக்கு தலா ரூ.1லட்சம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்ததும், அதனால்தான், பெற்றோர்கள் கட்டணம் அதிகமாக இருந்தாலும் தங்களது குழந்தைகள் டாக்டராக வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற இந்தப் பள்ளியை விரும்பி வருவதாக தெரிவித்து உள்ளார்.
இதுவரை நடந்த விசாரணையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள், முதல்வர் புர்ஷோத்தம் ஷர்மா உள்ளிட்டோர், தங்களுக்குத் தெரிந்த கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கும்படி, தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்கப்படாமல் விடப்பட்டது.
தேர்வு முடிந்த உடனேயே, முதல்வர் சர்மா மற்றும் புவியியல் ஆசிரியர் பட் ஆகியோர் ஓ.எம்.ஆர் தாள்களில் பதிலளிக்கப்படாத கேள்விகளை நிரப்பி அதை சீல் செய்வதற்கு முன் உறைக்குள் போட வேண்டும். இருப்பினும், அவர்கள் தங்கள் திட்டப்படி செயல்பட முடியவில்லை.
மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், சாத்தியமான முறைகேடுகள் குறித்த ஒரு தகவலைத் தொடர்ந்து, பஞ்சமஹால் மாவட்ட ஆட்சியர் கோத்ரா மையத்தை ஆய்வு செய்ய இரண்டு அதிகாரிகளின் குழுக்களை அனுப்பினார். “படேலுக்கு அறிமுகமான ஒருவர், ஒரு மாணவன் உடன் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கொடுத்தார். மாணவர் அதே நடைமுறையின் கீழ் நீட் தேர்வில் தேர்ச்சி பெற உதவிக்காக (குற்றம் சாட்டப்பட்டவரை) அணுகினார். தேர்வு முடிவடைவதற்கு சற்று முன்னதாகவே அதிகாரிகள் அனுப்பப்பட்டனர். அதனால்தான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஓ.எம்.ஆர் தாள்களை சீல் வைப்பதற்கு முன் மாற்றங்களைச் செய்ய முடியவில்லை.”
மாவட்ட கல்வி அதிகாரி கிரித்குமார் படேல் அளித்த புகாரின் பேரில் குஜராத் காவல்துறை தாக்கல் செய்த எஃப்.ஐ.ஆர்., முறைகேட்டைச் செய்வதற்காக தேர்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரூ. 7 லட்சம் ரொக்கத்துடன் புவியியல் ஆசிரியர் பட் கார்னர் செய்யப்பட்டதால் முறைகேடு முயற்சி முறியடிக்கப்பட்டது என்று கூறுகிறது.
மேலும், கோத்ராவில், ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளையின் தலைவரான தீக்ஷித் படேல், தனது அரசியல் “தொடர்புகளுக்கு” பெயர் பெற்றவர். பார்வதி மற்றும் பாடலில் உள்ள இரண்டு பள்ளிகளின் நிர்வாகத்தை தீக்ஷித் படேல் தனிப்பட்ட முறையில் கவனித்துக்கொண்டதாக பார்வதி ஊழியர்கள் தெரிவித்தனர். இரண்டு பள்ளிகளின் வெற்றியைத் தொடர்ந்து, அவரது அறக்கட்டளை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பஞ்ச்மஹாலின் வவ்டி குர்த் கிராமத்தில் பழங்குடியின பெண் மாணவர்களுக்காக குஜராத் அரசாங்கத்தின் கியான் சக்தி சிறப்புப் பள்ளியை நிறுவியது. கோவிட்-19க்கு முன், அறக்கட்டளையானது குஜராத்தில் உள்ள ஆனந்த் நகரம், நதியாட் மற்றும் போரியாவி ஆகிய இடங்களில் மூன்று பள்ளிகள் உட்பட மொத்தம் ஐந்து பள்ளிகளை நடத்தி வந்தது.
ஜெய் ஜலராம் கல்வி அறக்கட்டளை கேதா மாவட்டத்தில் உள்ள வனக்போரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, இரண்டு பள்ளிகளில், குறிப்பாக பாடலில் உள்ள மற்ற ஊழியர்களின் தொடர்பு குறித்தும் சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.