சென்னை: வார இறுதி நாட்களையொட்டி சென்னை உள்பட பல நகரங்களில் இருந்து 950 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
வார இறுதி நாட்கள் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்கா அரசு வழக்கமான இயக்கும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. அதன்படி, இந்த வாரம் வார இறுதி நாளான வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னை-புறநகர் பகுதியில் இருந்து வெளியூர் பயணம் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் இயக்கி வருகின்றன.
வார விடுமுறை தினங்களான நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னையில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து சென்னைக்கும் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “ஜூலை 13,14 வார இறுதி நாட்கள் (சனி, ஞாயிறு) என்பதால் சென்னையிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூலை 12, 13 தேதிகளில் 590 பேருந்துகள் மற்றும் சென்னை, கோயம்பேட்டிலிருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 130 சிறப்பு பேருந்துகளும், திருவண்ணாமலைக்கு 30 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பிற பகுதிகளுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக 950 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்பேருந்துகளை www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க குறிப்பிட்ட பேருந்து நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதி நாட்களில் பயணிக்க இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.