டெல்லி: தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் கிடைக்கப்பெறும் நிதியில் அதிகாரிகளுக்கு சொகுசு கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக  பயன்படுத்து வது தவறு என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பெரும்பாலான இந்து கோவில்கள் செயல்படும் நிலையில், பொதுமக்கள் கோவிலுக்கு வழங்கும் நிதியை திமுக அரசு முறைகேடாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ’கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு, கோயிலுக்குக் காணிக்கையாக கொடுத்த மாடுகளைக் காணவில்லை, கோயிலின் வைப்பு நிதி குறைந்துவிட்டது’  அறநிலையத் துறை மீதான குற்றச்சாட்டுகள் தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகின்றன.

அண்மையில் கூட தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’’திருச்செந்தூர் முருகன் கோயிலில் 5,300 மாடுகளை காணவில்லை. திருச்செந்தூர் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய மாடுகள் குறித்தான தகவல்கள் உள்ளன. அந்த மாடுகளை ஏலம் விட்டது யார்? மாட்டை திருடி சென்றனரா என்பது குறித்தான தகவல்கள் தெரியவில்லை. வடிவேலு கிணற்றை காணோம் என்பது போல் மாட்டை காணவில்லை’’ என வேடிக்கையாகப் பேட்டியளித்தார்.

இதேபோல பழனி முருகன் கோயிலுக்கு காணிக்கையாக அளித்த தங்கவேல் கணக்கில் வரவில்லை என கூறி சென்னையைச் சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். பின்பு, விசாரணையில் அந்த தங்கவேல் கண்டுபிடிக்கப்பட்டு கணக்கில் சேர்க்கப்பட்டது.

இந்த நிலையில், திமுக ஆட்சிக்கு வந்த பின் கடந்த 2 ஆண்டுகளில் சமயபுரம் கோயிலின் சேமிப்பு நிதியில் ரூ. 422 கோடி குறைந்துள்ளதாகவும் , அதிலிருந்து இன்னோவா, ஸ்கார்பியோ என 2 கார்கள் வாங்கப்பட்டு இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு ஆலய வழிபடுவோர் சங்க தலைவர் டி.ஆர்.ரமேஷ் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கோவில்களில் கிடைக்கும் நிதியில் இருந்து துறை அதிகாரிகள் மட்டுமின்றி மற்ற துறை அதிகாரிகளுக்கும் சொகுசு கார்கள் வாங்கப்படுவதுடன், பல்வேறு அரசு திட்டங்களுக்கும் கோவில் நிதி பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில்,  தமிழ்நாட்டில்  கோயில் நிதியில் முறைகேடுகள் செய்யப்படுவதாக  உச்சநீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆலயம் காப்போம் என்ற அமைப்பின் சார்பில்  உச்சநீதி மன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள 38 ஆயிரம் கோவில்களில் பெரும்பாலான கோவில்களில் அறங்காவலர்கள் நியமிக்காத நிலையில், மறைமுகமாக கோவில் நிதியில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அவ்வாறு கோவில் நிதியை அறநிலையத்துறைக்கு மாற்றியதை திரும்ப வழங்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு சுஇன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக கோவில்களுக்கு வரும் உண்டியல் காசுகளை முறைப்படுத்த ஏதும் திட்டங்கள் உள்ளதா என்று கேள்வி கேட்ட  உச்சநீதிமன்றம்,   தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்களில் வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது எனவும்  தமிழ்நாடு அரசுக்குச  கேள்வி எழுப்பியது. 

மேலும், தமிழக கோவில்களில் இருந்து கிடைக்கும்  நிதியானது,  கல்வி போன்ற சமூக நல திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எவ்வித பிரச்சினையும் இல்லை என்று தெரிவித்த  நீதிபதிகள், மாறாக கோவில்   நிதியை கொண்டு உயர் ரக கார்கள் வாங்குவது போன்ற சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் தவறு எனவும் தெரிவித்துள்ளது.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது,   தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் நடைபெற்ற பேரணியில் பேசிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவில்களின் நிதியைக் கையாளுவதில் முறைகேடு செய்வதாகவும், கோவில் சொத்துக்களை மோசடி செய்வதாகவும், கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பதாகவும் தமிழக அரசின் மீது கடுமையாகக் குற்றம் சாட்டியிருந்தார். பின்னர் அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி கொடுத்திரந்தார். இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீண்டும் பதில் தெரிவித்துருந்தார்.

பிரதமருக்குப் பதில் சொல்கிறேன் என்ற பெயரில், வழக்கம்போல கையில் இருந்த துண்டுச் சீட்டைப் பார்த்துப் பேசியிருக்கிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று விமர்சித்ததுடன்,  இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள எண்ணற்ற வழக்குகளை பரிசீலனை செய்ய, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நேரமோ நோக்கமோ இருக்காது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். எனவே, இந்து சமய அறநிலையத்துறையின் அதிகார வரம்பு மீறிய செயல்பாடுகள் பற்றியும், இந்து சமய அறநிலையத்துறையின் பிடியில் இருந்து, கோவில்களை ஏன் விடுவிக்க வேண்டும் என்பதையும் அவருக்கு விரிவாக விளக்க விரும்புகிறோம்.

1984-85 ஆம் ஆண்டில், இந்து சமய அறநிலையத்துறை, தங்கள் நிர்வாகத்தின் கீழ், 5.25 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தது. இந்து சமய அறநிலையத் துறையின் சமீபத்திய குறிப்பின்படி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கோவில் நிலங்களின் அளவு, இன்று 4.78 லட்சம் ஏக்கராகக் குறைந்துள்ளது. இவற்றிலும், 3.25 லட்சம் ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே இந்து சமய அறநிலையத்துறை பட்டா உள்ளது. எனவே, கடந்த 35 ஆண்டுகளில், 2 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. திமுக அரசு கூறுவது போல, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து கோவில் நிலங்கள் மீட்கப்பட்டதாக வைத்துக் கொண்டாலும், மீட்கப்பட்டதாக் கூறப்படும் கோவில் நிலத்தின் அளவு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலத்தின் அளவில் வெறும் 10%க்கும் குறைவே. மேலும் கடந்த 2 ஆண்டுகளில், கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கையை, தமிழக மக்களுக்கு வெளிப்படையாகக் கூற முன்வருவார்களா?

இந்து சமய அறநிலையத்துறை, அதிகார துஷ்பிரயோகம் செய்வதையும், இந்து சமய அறநிலையச் சட்டப் பிரிவு 66(1)ன் விதிகளுக்கு புறம்பாக, கோவில் நிதியைப் பயன்படுத்துவதையும் எண்ணற்ற முறை சுட்டிக்காட்டியுள்ளோம்.

சட்டமன்ற மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளில், கல்லூரிகள் கட்ட கோவில் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறையில் உள்ள 4 கோவில்களில் இருந்து 99 லட்சம் ரூபாய் நிதியை எடுத்து, இந்து சமய அறநிலையத்துறைக்கு அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. மதுரையில் உள்ள 5 கோவில்களில் இருந்து, 98 லட்சம் ரூபாய் எடுத்து, இந்து சமய அறநிலையத் அலுவலகங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

திருச்சியில் உள்ள 10 கோவில்களில் இருந்து, 1.46 கோடி ரூபாய் நிதி, இது போன்ற பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. வேலூரில், ரூ. 2.64 கோடி பணம், இந்து சமய அறநிலையத்துறைக்கான அலுவலகங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது போக, இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 117 கோவில்களில், மோசடியான நிர்வாக அதிகாரிகள் நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த நியமனங்களுக்கு, இந்து சமய அறநிலையத் துறையால் முறையான நியமனக் கடிதங்களை வழங்க முடியவில்லை.

மோசடி நியமனங்கள் நடந்துள்ள இந்தக் கோவில்கள், பக்தர்களின் உண்டியல் நன்கொடை அதிகமாக உள்ள கோவில்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவில் நிதியில் 85 சொகுசு கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும், சிறிய எடுத்துக்காட்டுகள் மட்டுமே.

2 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள எந்த அறக்கட்டளையும், வெளித் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். இருப்பினும், தமிழக இந்து சமய அறநிலையத் துறை, ஒருபோதும் வெளித் தணிக்கையின் கீழ் கொண்டுவரப்படவில்லை. 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இந்து சமய அறநிலையத்துறையின் தணிக்கையை, தமிழக அரசின் நிதித்துறை மேற்கொள்ளும் என்று தமிழக அரசு அறிவித்தது. தமிழக அரசின் நிதித் துறை தணிக்கை என்பது வெளித் தணிக்கைக்கு இணையானதாக இருக்கும் என்று ஊழல் திமுக அரசு நம்புவது வியப்புக்குரியது. வெளித் தணிக்கை நடத்த தமிழக அரசு ஏன் பயப்படுகிறது?

இந்து சமய அறநிலையத் துறையானது, தங்கள் நிர்வாகத்தின் கீழ் உள்ள கோவில் நகைகளைக் கணக்கெடுக்க, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நகைத் தணிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகக் கோவில்களில், நகைத் தணிக்கை கடந்த முறை எப்போது நடத்தப்பட்டது என்பது குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய திமுக அரசு தயாரா? திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே, 2000 கிலோ கோவில் தங்க நகைகளை உருக்க விரும்பியதால், மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்டு, கோவில் தங்க நகைகளை உருக்குவதைத் தடுத்தது. தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்ட தமிழக அரசு, தரம் குறைந்த தங்கம் எனப் பிரித்தது எத்தனை கிலோ எடை தங்கம் என்பதை மக்களுக்கு தெரிவிக்க முடியுமா?

கோவில் சொத்துகளைப் பொறுத்தவரை, இந்து சமய அறநிலையத் துறை, ஒரு சதுர அடிக்கு 1 ரூபாய் மட்டுமே வாடகைக் கட்டணமாக வசூலிக்கிறது. வெளித் தணிக்கை மூலமாக மட்டுமே, கடந்த பல ஆண்டுகளாக ஒவ்வொரு கோவில் சொத்துக்களும் எவ்வளவு சுரண்டப்பட்டுள்ளன என்பது தெரியவரும். கடந்த 30 ஆண்டுகளாக, இந்து சமய அறநிலையத்துறையின் உள் தணிக்கைகளில் கேட்கப்பட்ட 15000க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு, தமிழக அரசு இது வரை பதிலளித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனை அழுக்கையும் தங்கள் முதுகில் சுமந்து கொண்டு, சிதம்பரம் நடராஜர் கோயிலையும், பாரிமுனை காளிகாம்பாள் கோயிலையும் தமிழக அரசு தங்கள் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர விரும்புகிறது. கோவில் செல்வத்தைக் கொள்ளையடிப்பது மட்டுமே இவர்கள் நோக்கம்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில், கோவில்களை சீரமைத்து, புனரமைக்க, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக வாக்குறுதி அளித்தது. இன்று வரை அதில் 5% கூட, தமிழக அரசு கோவில்களுக்குச் செலவிடவில்லை. கோவில் உண்டியல் பணத்தை எடுத்துச் செலவழித்த நிதியையே தங்களின் வெற்றியாக விளம்பரம் செய்து வருகிறார்கள்.

கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு, காணாமல் போன கால்நடைகள், சொத்துக்கள், தங்க நகைகள் இவையே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு . இவற்றை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மிகச் சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளார். கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல என்பதை, தமிழக முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் பிடியில் இருந்து நமது கோவில்களை விடுவித்து, சுரண்டப்பட்டவை அனைத்தும் மீட்கப்படுவதை உறுதி செய்வோம் என கூறியிருந்தார்.