டெல்லி: இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி ஜூலையில் ரஷ்யா செல்கிறார்.  ஜூலை 8-9 தேதிகளில் அவர்  ரஷ்யா செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  உக்ரைன் போருக்குப் பின்னர் பிரதமர் மோடி ரஷ்யா செல்வது இது முதன்முறையாகும்.

பிரதமர் மோடி கடைசியாக 2019-ல் ரஷ்யாவிற்கு சென்றார். அப்போது அவர் 20-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். இதையடுத்து, 3வது முறையாக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மீண்டும் ரஷ்யா செல்கிறார். இந்த பயணத்தின்போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன்  பல்வேறு விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தை நடத்துவார் என்று ரஷ்ய அதிபரின்  கிரெம்ளின் மாளிகை அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக கிரெம்ளின் மாளிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூலையில் ரஷ்யா வருவதாகவும், அப்போது, ரஷ்ய அதிபர்  புதினும் மோடியும் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிப்பார்கள்  என்றும்,   பிரதமர் மோடியும் புதினும் பரஸ்பர ஆர்வத்துடன் சமகால பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள் என்றும், இரு நாடுகளுக்கு இடையிலான பன்முக உறவுகளின் முழு வரம்பையும் மதிப்பாய்வு செய்வார்கள் என்றும் அந்நாட்டின்  வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மோடியின் ரஷ்ய விஜயம் குறித்து  கருத்து தெரிவித்த  ஐ.நா-வுக்கான ரஷ்யாவின் நிரந்தரப் பிரதிநிதி வசிலி நெபென்சியா இந்தியாவை ரஷ்யாவின் நீண்டகால நண்பர் என்று கூறியதுடன்,  “எங்களுக்கு இந்தியாவுடன் சிறப்பு சலுகை, ராஜதந்திர கூட்டு உறவுகள் உள்ளன. நாங்கள் பல துறைகளில் ஒத்துழைக்கிறோம், இது நம்முடைய நாடுகள் ஒத்துழைக்கும் முழு அளவிலான பிரச்சினைகளிலும் ஒரு முக்கியமான உரையாடலாக இருக்கும் என்றும், இதனால், “ரஷ்ய-இந்திய உறவுகள் இன்னும் சிறப்பாக மலரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்”  என்று தெரிவித்துள்ளார்.