சென்னை:  நிதி கேட்கும்போது நாங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்போம் என இப்போ தெரியுதா?   என சட்டப்பேரவையில் அமைச்சர் பிடிஆரை, மூத்த அமைச்சர் துரைமுருகன்  கிண்டலடித்தார். இதனால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

சட்டப்பேரவையின் மானிய கோரிக்கூட்டத்தொடரின் கடைசி நாள் அமர்வு இன்று நடைபெற்றது. இன்று காலை அவை தொடங்கியதும், முதலில் நடைபெற்ற கேள்வி நேர விவாதத்தின்போது பேசிய கீழ்ப்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டியின் கேள்விக்கு பதில் அளித்த தகவல் தொழில் நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,

கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் உள்ள கடம்பை கிராமத்தில் உள்ள 50 ஏக்கர் அரசு நிலத்தில் தற்போதைக்கு ஐடி பார்க் உருவாக அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அங்கிருந்து 160 கிமீ தொலைவில் சென்னையில் சோழிங்கநல்லூர், 187 கிமீ தொலைவில் ஒசூர் ஆகிய இடங்களில் ஐடி பார்க் உள்ளதால், தற்போது புது ஐடி பார்க் துவங்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை என கூறினார்.

இதையடுத்து மீண்டும் பேசிய   கு.பிச்சாண்டி எம்.எல்.ஏ, கீழ்பெண்ணத்தூரில் இருந்து சென்னை, ஒசூர் அருகில் உள்ளதாக அமைச்சர் கூறினார். அங்கெல்லாம் இடம் கிடைப்பது கடினம். ஆனால் எங்கள் தொகுதியில் 140 ஏக்கர் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. இது போன்ற இடங்களில் ஐடி பார்க் கட்டினால் வளர்ச்சிக்கு வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.

இதற்க மீண்முடும் பதில் அளித்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், நிலம் கிடைப்பது கடினம் ஆனதுதான். அது உண்மை, ஆனால் குறுகிய நேரத்தில், குறுகிய செலவில் வேலை வாய்ப்புகளை ஐடி துறையால்தான் உருவாக்க முடியும். ஆனால் நிதி ஒதுக்கீட்டுக்கு ஏற்பதான் எங்களால் பணி செய்ய முடியும். இந்த நிதியாண்டில் ஐடி துறைக்கு மொத்த நிதி ஒதுக்கீடு 119 கோடி ரூபாய். இதை பல்வேறுகளுக்கு ஒப்பிட்டுப்பார்த்தால் ஓரளவுக்குதான் செயல்படுத்த முடியும் என தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய அவை முன்னவரும், அமைச்சருமான துரைமுருகன், ’இப்போ தெரியுதா தியாகராஜனுக்கு, நாங்க நிதிகேட்கும்போது எவ்வளோ கஷ்டப்பட்டு இருப்போம்னு’ என கிண்டல் அடித்தார்.

பின்னர் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அன்று நான் நிதி அமைச்சராக இருந்தபோதும், ஐ.டி துறைக்கு இந்த அளவுதான் ஒதுக்கீடு செய்தோம். நான் இருந்த போது ஜாஸ்தி, இப்போது குறைவு என்று கூறவில்லை. துரைமுருகன் அவர்களின் துறைக்கும் பல ஆயிரம் கோடி ஆண்டுதோறும் ஒதுக்கிக் கொண்டே இருக்கிறோம் என தெரிவித்தார்.

இதனால் பேரவையில் சிரிப்பலை ஏற்பட்டது.