ரயில்களில் பயணிகளை ஆடு மாடுகளை அடைப்பது போல் ஏற்றிச் செல்வதால் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படுவதாகவும் இது ரயில்வே துறையின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மும்பை புறநகர் ரயில்களில் நாளொன்றுக்கு 40 லட்சம் பயணிகள் பயணிப்பதாக 2012ம் ஆண்டு கணக்கெடுப்பு கூறுகிறது.
ஆண்டுக்கு ஆண்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதேவேளையில் பழமையான ரயில் நிலையங்களின் மோசமான உள் கட்டமைப்புகள் காரணமாக ஆண்டுக்கு 2000 பேர் உயிரிழக்க நேரிடுகிறது.
தண்டவாளத்தை கடப்பது, கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளுவில் ரயிலில் இருந்து விழுவது, பிளாட்பாரம் , ரயில் இடைவெளிகளுக்கு இடையே விழுவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.
2023ம் ஆண்டு மட்டும் 2590 பேர் ரயில் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த உயிரிழப்புகளைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது பயணிகளின் உயிரை அலட்சியப்படுத்துவதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு நீடித்து வருகிறது.
இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த பொதுநல வழக்கை விசாரித்த நீதிபதி தேவேந்திர குமார் உபாத்யாயா, நீதிபதி அமித் போர்கார் அமர்வு ‘’மும்பை புறநகர் ரயில்களின் பயணம் செய்வது, கல்லூரிக்கு, வேலைக்கு செல்வது என்பது போருக்கு செல்வதைப் போல் உள்ளது’’ என்று வேதனை தெரிவித்தனர்.
“ரயில்களில் பயணிகள் ஆடு, மாடுகளைப் போல், அதைவிடவும் மோசமாக நடத்தப்படுகிறார்கள். இது வெட்கக்கேடானது. இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை. இது ரயில்வே அதிகாரிகளின் பொறுப்பு, கடமை.
பொதுமக்களின் உயிரைக்காக்க உத்தரவிற்காக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக மேற்கு, மத்திய ரயில்வே நிர்வாகங்களின் பொது மேலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்று காட்டமாக கூறியுள்ளனர்.