டெல்லி

ச்சநீதிமன்றம் நீட் தேர்வு மோசடி குறித்து தேசிய தேர்வு முகமைக்கு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 5-ந்தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வில் சுமார் 24 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியானது.  அப்போது ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 பேர் உள்பட 67 தேர்வர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்றது, 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என பல்வேறு சர்ச்சைகள் எழும்பின.

மாணவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடத்தியதுடன் பல்வேறு மாநில உயர்நீதிமன்றங்கள் மற்றும் உசநிதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நீட் தேர்வில் 0.001 சதவீத அளவிற்கு அலட்சியம் கண்டறியப்பட்டாலும் அதை மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தது.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் சிலருக்கு அவர்களின் விடைத்தாள்கள் (ஓ.எம்.ஆர். ஷீட்) கிடைக்கவில்லை எனக் கூறி, உச்சநீதிமன்றத்தில் தனியார் நீட் பயிற்சி மையத்தின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு நீதிபதி மனோஜ் சின்ஹா, நீதிபதி எஸ்.வி.என்.பட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது  தேசிய தேர்வு முகமை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேர்வர்களின் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

நீதிபதிகள் இதனை பதிவு செய்து விடைத்தாள்கள் தொடர்பான புகார்களை தெரிவிப்பதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தேசிய தேர்வு முகமை பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை அடுத்த மாதம் 8-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.