சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளத. தற்போதைய நிலையில் மருத்துவமனையில் 155 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதுதொடர்பான வழக்கில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 18ந்தேதி (ஜுன்) கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் திமுக பிரமுகர் கண்ணுக்குட்டி என்பவர் விற்பனை செய்த பாக்கெட் கள்ளச்சாராயத்தை குடித்த 200க்கும் மேற்பட்டோர் உடல்நிலை பாதிக்கப்பட்டனர்.  அவர்கள்,  கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அடுத்தது உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றனர். நேற்று மாலை  59 பேர்  உயிரிழந்த நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கள்ளக்குறிச்சி கோட்டை மேடு பகுதியைச் சேர்ந்த ஜான்பாட்ஷா என்பவர் சிகிச்சை  நள்ளிரவு சிகிச்சை  பலனின்றி உயிரிழந்துள்ளார்.இதன்மூலம் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம், விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனைகளில் 155 பேர் உள் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த கள்ளச்சாராயம் மற்றும்  விஷ சாராய வழக்கில்  கண்ணுக்குட்டி உள்பட பலரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். இதுவரை, கள்ளக்குறிச்சி பகுயைச் சேர்ந்த கோவிந்தராஜ், தாமோதரன், விஜயா, சின்னதுரை, ஜோசப்ராஜா, ராமர், புதுவை மடுகரையை சேர்ந்த மாதேஷ், ஷாகுல் ஹமீது (65), பண்ருட்டியை சேர்ந்த சக்திவேல் (27), கள்ளக்குறிச்சி அருகே உள்ள சூலாங்குறிச்சியை சேர்ந்த கண்ணன் (30) ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த தெய்வீகன் (27), கள்ளக்குறிச்சி சூலாங்குறிச்சி அய்யாசாமி (65), செம்படாகுறிச்சி அரிமுத்து (30), சேஷசமுத்திரம் கதிரவன் (35) ஆகியோர் கடலூர்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த  நிலையில் சென்னை மதுரவாயலை சேர்ந்த சிவகுமார், பன்சால், சடையன், ரவி, செந்தில், ஏழுமலை உள்ளிட்ட 7 பேரை கைது செய்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இதன்மூலம் 21 பேர் கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஷ சாராயம் குடித்த 95 பேரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளார். இதனிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளி புதுச்சேரியைச் சேர்ந்த மாதேஷ் உள்ளிட்ட 9 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதித்துறை நடுவர் (எண்1) நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் குடித்து 60 பேர் பலியான விவகாரம் தொடர்பாக, சிபிஐ அல்லது சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு உத்தரவு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பாமக வழக்கறிஞர் கே.பாலு தாக்கல் செய்த மனு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.