சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் ஆறாய் ஓடுகிறது. அதை தடுக்க தவறிய முதல்வர் ஸ்டாலின் பதவி விலகணும் அதிமுக போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி காட்டமாக விமர்சனம் செய்தார்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவு 58ஆக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுகவினரை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் விஷச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதைத்தொடர்ந்து, திமுக கூட்டணி கட்சியான விசிக, எதிர்க்கட்சிகளான பாஜக, பாம, அதிமுக போன்ற கட்சிகளும் போராட்டங்களை அறிவித்து உள்ளன.
இதைத்தொடர்ந்து இன்று காலை மாநிலம் முழுவதும் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வருவாய் மற்றும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி சென்னையில் பாரிமுனையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார். மேலும், கள்ளக்குறிச்சியில் நடந்த துயரமான சம்பவம் மிகுந்த வேதனை, அதிர்ச்சியளிக்கிறது. திமுக பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, கள்ளச்சாராய மரணம் அதிகரித்து உள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தைக் கண்டித்து மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. காற்றை எப்படி தடை செய்யமுடியாதோ அப்படி மக்கள் உணர்வுகளுக்கு தடை விதிக்க முடியாது. அதிமுக ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு செய்து முதல்வர் அடக்குமுறையை கையாளுகிறார் என கடுமையாக சாடினார்.
மேலும், “கள்ளக்குறிச்சியில் விஷச்சாரயம் குடித்து 59 பேரின் உயிரிழந்த சம்பவத்திற்குத் தார்மீக பொறுப்பேற்று தமிழ்நாடு முதலமைச்சர் பதவி விலக வேண்டும். மேலும், இந்த விவகாரத்தில் திமுக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. சட்டசபையில் விஷச்சாராயம் குறித்துப் பேச முற்பட்ட போது அதற்கு அனுமதி தரப்படவில்லை. கேட்டால் சட்டசபையில் முக்கிய பிரச்னைகளை மட்டும் பேசுங்கள் என்கிறார்கள். இது முக்கியமான பிரச்னை இல்லை என்றால் வேறு எது தான் முக்கியமான பிரச்னை.
கள்ளக்குறிச்சியில் முக்கிய திமுக பிரமுகர்கள் ஆதரவோடுதான் கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. கள்ளச்சாராயம் தடை இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் கண்டுகொள்ளவில்லை. கள்ளக்குறிச்சியில் 58 பேரின் உயிரிழப்பிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் காரணம். கள்ளக்குறிச்சி மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இங்குள்ள காவல் துறையால் நீதி கிடைக்காது. சிபிஐ விசாரணை வேண்டும்”
இவ்வாறு அவர் தெரிவித்தார்.