வயநாடு
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வயநாடு தொகுதி எம் பி பதவியை ராஜினாமா செய்வதையொட்டி மக்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற தேர்தலில் கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றார். 2 தொகுதிகளில் ஒன்றை விட்டுக்கொடுக்க வேண்டியது கட்டாயம் என்பதால் அவர் வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்து ரேபரேலி தொகுதியை தக்கவைக்கிறார்.
ராகுல் ராஜினாமா செய்துள்ள வயநாடு தொகுதியில் அவரது சகோதரியும், கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்காவை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. வயநாடு மக்கள் தங்கள் தொகுதியில் இருந்து ராகுல் வெளியேறியதால் மிகுந்த வருத்தத்தில் உள்ள போதிலும் அவரது சகோதரியே மீண்டும் களமிறங்குவது அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
நேற்று வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி எழுதிய உணர்வுப்பூர்வமான கடிதத்தில்,
“வயநாடு தொகுதிக்கு நான் புதியவனாக இருந்தபோதும் நீங்கள் என்னை நம்பினீர்கள். அளவற்ற அன்பு மற்றும் பாசத்தால் என்னை அரவணைத்தீர்கள். நீங்கள் எந்த அரசியல் உருவாக்கத்தை ஆதரித்தீர்கள் என்பது முக்கியமல்ல, நீங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்த மதத்தை நம்புகிறீர்கள் அல்லது எந்த மொழியில் பேசுகிறீர்கள் என்பது முக்கியமல்ல.
நான் நாளுக்கு நாள் அவமதிப்பை எதிர்கொண்டபோது உங்கள் நிபந்தனையற்ற அன்புதான் என்னை பாதுகாத்தது. நீங்கள்தான் எனக்கு அடைக்கலமாக, எனது வீடாக, எனது குடும்பமாக இருந்தீர்கள். நீங்கள் என்னை சந்தேகப்படுவதாக நான் ஒரு நொடி கூட உணரவில்லை. வயநாட்டில் நான் ஆற்றும் உரைகளை ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் இளம் சிறுமிகள் மொழிபெயர்த்து பேசும் துணிச்சல், அழகு மற்றும் நம்பிக்கையை மறக்க முடியாது.
எனக்கு மிகவும் தேவைப்படும்போது நீங்கள் எனக்குக் கொடுத்த அன்பு மற்றும் பாதுகாப்பிற்காக உங்களுக்கு எப்படி நன்றி தெரிவிப்பது என தெரியவில்லை. நீங்கள் எனது குடும்பத்தின் அங்கமாக இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடனும் நான் எப்போதும் இருப்பேன். எனது சகோதரி பிரியங்காவுக்கு நீங்கள் வாய்ப்பு அளித்தால் அவர் வயநாட்டை பிரதிநிதித்துவப்படுத்துவார். உங்கள் எம்.பி.யாக அவர் மிகச்சிறந்த பணியை செய்வார்”
என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]