சென்னை: சென்னையில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் 5 ஏக்கரில் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி துறை அமைச்சருமான சேகர்பாபு மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசினார். அப்போது பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தின் பாரம்பரிய கலாசாரத்தை வெளிப்படுத்தவும் மற்றும் தனித்தன்மை யைப் பறைசாற்றும் கைவினைப் பொருள்களின் விற்பனையை ஊக்குவிக்கவும் பல்வேறு வசதிகளுடன் கூடிய கடைகள், அரங்கங்கள் மற்றும் பொது வசதிகளுடன் கைவண்ணம் சதுக்கம் 5 ஏக்கா் நிலப்பரப்பில் ரூ.40 கோடியில் அமைக்கப்படும்” என்றார்.
இந்த கடைகள் மற்றும் அரங்குகள் பிரம்மாண்ட வசதிகளுடன் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டால் கைவினைப் பொருள்களின் விற்பனை செய்யும் ஏராளமான கலைஞர்கள் பயன்பெறுவார்கள்.
நமது மாநிலத்திற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர் மறறும் வெளிமாநிலத்தவர்கள் இந்த கைவினைப் பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்லும் வாய்ப்பு உள்ளது. இதேபோல் நமது மாநிலத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனிச்சிறப்பு வைத்த கைவினைப்பொருட்கள் தயாரிப்பு உள்ளது. அவற்றை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்கவும், அதை வாங்கவும் வாய்ப்பாக அமையும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் போது, ஏராளமான கைவினை கலைஞர்கள் வேலைவாய்ப்பு பெரும் வாய்ப்பு உள்ளது என்றார்.
ஏற்கனவே திமுக அரசு, சென்னை மெட்ரோ திட்டத்தை போல் பல்வேறு புதிய திட்டங்களை அரசு உருவாக்கி வருகிறது. குறிப்பாக கலாச்சார ரீதியாகவும், நம் மாநில பொருட்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. சென்னையை பொறுத்தவரை வாகன உதிரிபாகனங்கள் விற்பனைக்கு என்றே ஒரு ஏரியா, செல்போன் மற்றும் கணிணி விற்பனைக்கு என்றே ஒரு ஏரியா , உணவு சாப்பிடுவதற்கு என்றே ஏராளமான உணவு தெருக்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதேபோல் மீன் விற்பனைக்கும் உலகத்தரத்தில் சந்தைகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னையில் 5 ஏக்கரில் ரூ.40 கோடியில் கைவண்ணம் சதுக்கம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.