தஞ்சாவூர் மாவட்டம்,  கதிராமங்கலம், அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் ஆலயம்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை

தல சிறப்பு:

தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இத்தல சூரிய விநாயகரின் மீது ஒளிபடுகிறது.ம்.

பொது தகவல்:

இத்தலத்தில் மிருகண்டு முனிவர், கோயிலைக் கட்டிய குலோத்துங்க சோழன் ஆகியோருக்கும் சிற்பங்கள் உள்ளன.

பிரார்த்தனை:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். இறைவனுக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தலபெருமை:

கதிராமங்கலம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சூரிய விநாயகர் அருள்பாலிக்கிறார். தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இந்த விநாயகரின் மீது ஒளிபடுகிறது. இதனாலேயே இவர் சூரிய விநாயகர் எனப்பட்டார்.

பல தலங்களில் சூரிய ஒளி சிலைகள் மீது ஏதாவது குறிப்பபிட்ட நாளில் மட்டுமே விழும். ஆனால் இந்த விநாயகரை சூரியன் தினமும் வழிபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக்கோயிலில் ஞானாம்பிகை அம்பாள் தனி சன்னதியில் இருக்கிறாள். இந்த அம்பிகையின் சன்னதியில் குழந்தைகளுக்கென்றே விசேஷ விழிபாடு நடக்கிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள், அறிவு வளர்ச்சி பெற இங்கு பூஜை செய்கிறார்கள்.

இதற்காக பெற்றோர்கள் நேர்த்திக்கடன் போல, வெண்பொங்கல் வைக்கிறார்கள். வெண்பொங்கலை அம்பாள் சன்னதியில் வைத்து விட வேண்டும். அங்குள்ள அர்ச்சகர்கள் பொங்கலின் மீது வெண்டைக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்து பூஜை செய்து, குழந்தைகள் பெயரில் அர்ச்சனை செய்து, குழந்தைகளுக்கு ஊட்டச் சொல்கிறார்கள்.

இந்த பிரசாதத்தை சாப்பிடும் குழந்தைகள் ஞானாம்பிகையின் அருளால் கல்விவளம் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பல குழந்தைகள் இவ்வாறு நல்ல நிலைக்கு வந்ததாகவும் இப்பகுதிமக்கள் கூறுகிறார்கள்.

படிப்பில் மந்தமாக இருக்கும் குழந்தைகள் மட்டுமல்லாது, எல்லா குழந்தைகளையும் இந்த கோயிலுக்கு அழைந்துச்சென்று வாருங்கள். புத்திசாலித்தனம் மேலும் பெருகும். இயற்கை எழில் மிக்க இந்த ஊர் கம்பரால் கதிர்வேய்ந்தமங்கலம் என அழைக்கப்பட்டது.

சிவமல்லிகாவனம் என்ற பெயரும் இவ்வூருக்கு உண்டு. இந்த கோயிலில் சிவமல்லிகாவுக்கு தனியாக சிலை வடிக்கப்பட்டுள்ளது.

காளகஸ்தி பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இது ஆந்திராவில் இருப்பதால் அனைவராலும் செல்ல முடிவதில்லை. இப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் உள்ள காளகஸ்திக்கு சென்று காளஹஸ்தீஸ்வரரையும், ஞானம்பிகையையும், சூரிய விநாயகரையும் தரிசித்தால் போதும், காளகஸ்திக்கு சென்று வந்த பலன் கிடைக்கும்.

தல வரலாறு:

ஆந்திராவிலுள்ள காளஹஸ்திக்கு பக்தர்கள் தர்ப்பணம் செய்வதற்காக சென்று வருகிறார்கள். அங்கு செல்ல முடியாதவர்கள் இந்த கோயிலில் தர்ப்பணம் செய்து காளஹஸ்தியில் செய்த பலனை பெறலாம். “தென் காளஹஸ்தி என்ற சிறப்பு பெயரும் இவ்வூருக்கு இருக்கிறது. இதன் அடிப்படையில் இக்கோயில் அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர்.

சிறப்பம்சம்:

தினமும் அதிகாலை சூரியன் உதித்ததும் இத்தல விநாயகரின் மீது ஒளிபடுகிறது.

அமைவிடம்:

கும்பகோணம் – மயிலாடுதுறை ரோட்டில் குத்தாலத்திற்கு வடமேற்கில் 3 கி.மீ., தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து பஸ் வசதி உண்டு.

அருகிலுள்ள ரயில் நிலையம்:

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்:

திருச்சி

தங்கும் வசதி:

மயிலாடுதுறை