புதுக்கோட்டை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக அரசுக்கு எதிராக  நீதிமன்ற வளாகத்தில் முழக்க மிட்ட சவுக்கு சங்கர் தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரபல யுடியூபர்  சவுக்கு சங்கர் ஏற்கனவே, கள்ளக்குறிச்சியில் திமுகவினர் ஆதரவோடு கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டிருந்தார். அதன்மீது தமிழ்நாடு அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல், சவுக்கு சங்கரை பிடித்து சிறையில் அடைத்து துன்புறுத்தி வருகிறது. இந்த நிலையில், அவர் ஏற்கனவே தெரிவித்தபடி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது திமுக நபர் என்பதும், இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்டவில்லை என்பது தெளிவாகி உள்ளது. இந்த கள்ளச்சாராய விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 தாண்டி உள்ள நிலையில், மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த பரபரப்பான சூலில்,   வழக்கு ஒன்றில், ஆஜர்படுத்துவதற்காக போலீஸார் சவுக்கு சங்கரை  புதுக்கோட்டை நீதிமன்றம் அழைத்து வந்தனர். அறந்தாங்கி குற்றவியல் நீதிபதி விடுப்பில் உள்ளதால், ஆலங்குடி குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் சங்கர்  ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.விஜயபாரதி, சவுக்கு சங்கரை சொந்த ஜாமீனில் விடுவித்தார்.

நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த சவுக்கு சங்கர், ‘‘பொய் வழக்கு போடுவதில் ஆர்வம் காட்டும் போலீஸார், கள்ளச்சாராய ஒழிப்பில் ஆர்வம் காட்டியிருந்தால் கள்ளக்குறிச்சியில் இத்தனை பேர் உயிரிழந்திருக்க மாட்டார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்துக்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” என்று முழக்கமிட்டார். பின்னர்,  அவரை போலீஸார் அவரை வேனில் ஏற்றிச் சென்றனர்.