டெல்லி
காங்கிரஸ் மாநிலத்தலைவர்கள் நாளை நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளனர்.
கடந்த 4 ஆம் தேதி ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்வை ரத்து புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என கோரிக்கையும் எழுந்துள்ளது நாளை நீட் முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“‘நீட்’ தேர்வு முடிவுகள் தொடர்பாக எழுந்த ஏராளமான புகார்கள் கவலை அளிக்கின்றன. சில விண்ணப்பதாரர்களின் மதிப்பெண்களை அதிகரித்த முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவுகள் பற்றிய குற்றச்சாட்டுகளால் முடிவுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தின.
பீகார், குஜராத் மற்றும் அரியானா மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் தெளிவாக தெரிகிறது. இது பா.ஜனதா ஆளும் மாநிலங்களில் முறைகேடுகளின் வடிவத்தை வெளிப்படுத்துகிறது. இந்த குற்றச்சாட்டுகளின் தீவிரத்தை சுப்ரீம் கோர்ட்டும் எடுத்துக்காட்டியுள்ளது.
இத்தகைய முறைகேடுகள் தேர்வு செயல்முறையின் நம்பகத்தன்மையை குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது. மேலும் எண்ணற்ற மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கிறது. வினாத்தாள் கசிவுக்கு எதிராக கடுமையான சட்டங்களை அமல்படுத்தி இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது.
எனவே, ‘நீட்’ தேர்வு முறைகேடுகளுக்கும், அரசின் மவுனத்துக்கும் எதிராக அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் நாளை மாணவர்களுக்கு நீதி கோரி மாநில தலைநகரங்களில் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்”
என்று தெரிவித்துள்ளார்.