டெல்லி: நீட் தேர்வு முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  நீட் முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா என பதில் அளிக்க மத்தியஅரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நீட் முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற விடுமுறைகால அமர்வு நேற்று (வெள்ளிக்கிழமை)  உத்தரவிட்டது.

நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் நாள் நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கான முடிவுகள்  ஜூன் ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பத்து நாட்கள் முன்பாக  வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற ஜுன்  4ஆம் தேதி மாலையே தேர்வ முடிவுகளை  தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.  மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நீட் தேர்வில் நாடு முழுவதும் 67 மாணவர்கள் முழு மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். ஹரியானா மாநிலத்தில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் 720க்கு 720 மதிப்பெண் பெற்றுள்ளனர். இம்முறை 67 பேர், அதிலும் ஒரு கேள்விக்கு தவறான விடையளித்து மைனஸ் மதிப்பெண் பெற்ற 44 பேரும் 720 மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பது வியப்பையும், நீட் மீது நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளன.

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களிலிருந்து மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாவுக்கு சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தவறான விடையளித்தால் ஒரு மைனஸ் மதிப்பெண் வழங்கப்படும். அதனால், முதலிடம் பிடித்தவர்கள் 720 மதிப்பெண் பெற்றால், அதற்கு அடுத்த நிலையில் வருபவர்கள், ஒரு வினாவுக்கு விடையளிக்காமல் இருந்திருந்தால் 716 மதிப்பெண்களும், தவறான விடையளித்திருந்தால் 715 மதிப்பெண்களும் மட்டும் தான் பெற முடியும். ஆனால், இம்முறை முழு மதிப்பெண் எடுத்தவர்களுக்கு அடுத்த நிலையில் வந்தவர்கள் 719, 718, 717 என மதிப்பெண்களை எடுத்துள்ளனர். இந்த மதிப்பெண் களை எடுக்க சாத்தியமே இல்லை என்பதால், விடைத்தால் மதிப்பீட்டில் முறைகேடுகளும், குளறுபடிகளும் நடந்திருக்குமோ? என்ற  குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனால் நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. மேலும்  பல இடங்களில் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் நீட் குளறுபடி குறித்து ஏராளமான வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த முறைகேடு தொடர்பான  சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என ஹித்தன் சிங் காஷ்யப் என்பவா் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளாா்.

இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோா் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு  விசாரித்தது. அப்போது,‘சிபிஐ விசாரணை நடத்துவது குறித்து மத்திய அரசும், என்டிஏவும் பதிலளிக்க வேண்டும். அதேபோல், இந்த விவகாரம் தொடா்பாக சிபிஐ மற்றும் பீகாா் அரசும் இரண்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

 நீட் தோ்வு முறைகேடு தொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஒருங்கிணைத்து ஒன்றாக விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தேசிய தோ்வு முகமை மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த இதே அமா்வு, இதுதொடா்பாக பல்வேறு உயா்நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்தவா்கள் பதிலளிக்குமாறும், பிற மனுக்கள் மீது ஜூலை 8-ஆம் தேதி விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தது.

நீட் தோ்வில் 1,563 பேருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அவா்களில் மறுதோ்வை எழுத விரும்பும் மாணவா்களுக்கு ஜூன் 23-ஆம் தேதி தோ்வு நடத்தப்படவுள்ளதாகவும் மத்திய அரசு வியாழக்கிழமை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.

மறுதோ்வை எழுத விரும்பாத மாணவா்களுக்கு கருணை மதிப்பெண்களின்றி அவா்கள் பெற்ற மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாக எடுத்துக்கொள்ளப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களுக்கு ஜூன் 23 அன்று மறுதேர்வு! உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தகவல்

நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை