கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில்  முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர்.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா,

நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,

இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

நடைபெற்று முடிந்த 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பறிறயது. இதை கொண்டாடும் வகையில் கோவையில் முப்பெரும் விழா நடத்த தீர்மானிக்கப்பட்டது. கடந்த ஜூன் 8ஆம் தேதி மாலை, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா – ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வருகிற ஜூன் 14ஆம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கான தேதி முதலில் 14ந்தேதி என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் 15ந்தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டு, விழா நடைபெறும் இடமும்  கோயமுத்தூர் கொடிசியா மைதானம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று மாலை 4மணிக்கு விழா தொடங்குகிறது.

இந்த விழாவுக்காக கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு  உள்ளது.. அத்துடன் இதில் பங்கேற்க வருபவர்கள் அமர வசதியாக இருக்கைகளும் போடப்பட்டு உள்ளன. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த விழாவில் பங்கேற்பதற்காக வருவதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக விழா நடைபெறும் மைதானம் முழுவதும் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டின் கீழ் வந்து உள்ளது. அவர்கள் அங்கு தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவையில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அவர் விழா நடைபெறும் இடத்துக்கு சென்று விழாவில் பங்கேற்கிறார்.  விழாவிற்கு வருபவர்களை அமைச்சர் முத்துசாமி வரவேற்கிறார். இந்த விழாவில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவன தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் பங்கேற்கிறார்கள்.