டெல்லி:  விருதுநகரில் தொகுதியில்  மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கைவிரித்து உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் கடுமையான போட்டி நிலவியது. அங்கு திமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து, அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக வேட்பாளராக மறைந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார்.  அதே வேளையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடிகை ராதிகா சரத்குமார் போட்டியிட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் கெளசிக் களமிறங்கினார். அங்கு கடுமையான போட்டி நிலவியது. தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, விஜயபிரபாகரன் சொற்ப ஓட்டு வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் முன்னிலை பெற்றார்.  அதாவது, இறுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 3,85,256 வாக்குகளை பெற்றார். தேமுதிகவின் விஜய பிரபாகரன் 3,80,877 வாக்குகளை பெற்று 4,379 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூரிடம் தோற்றுப்போனார். இறுதியில்,   மாணிக்கம் தாகூரிடம் 4,379 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து,  ஓட்டு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக தேமுதிக குற்றம்சாட்டியது.  இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரு மான பிரேமலதா விஜயகாந்த் ,  ‛‛விருதுநகரில் ஓட்டு எண்ணிக்கையின்போது குளறுபடி நடந்தது. சூழ்ச்சி செய்து விஜயபிரபாகனை ஜெயிக்க விடக்கூடாது என்பதற்காக அமைச்சர்களை வைத்து அதிகாரிகளை மிரட்டி, கலெக்டர் பிரஷர் தாங்க முடியாமல் செல்போனை ஸ்விட்ச்ஆப் செய்யும் வகையில் தவறு நடந்துள்ளது. இதனால் மறு ஓட்டு எண்ணிக்கை நடத்த வேண்டும்” என்று கூறினார். சின்னப்பையனை தோற்கடிக்க கலெக்டருக்கு பிரஷர் கொடுக்கப்பட்டதாகவும், தி முகவுக்கு பெரிய மனசு இல்லை  என்றும் பிரேமலதா வருத்தப்பட்டார்.  அதோடு தேமுதிக வழக்கறிஞர் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் மறு ஓட்டு எண்ணிக்கைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

இதைத்தொடர்ந்து விருதுநகர் தொகுதியில்,  மறு வாக்கு எண்ணிக்கை கோரி டெல்லியில் விஜயபிரபாகரன் தேர்தல் ஆணையரை சந்தித்து மனு அளித்தார். அவரது மனுவில்,   தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த விஜய பிரபாகரன், “விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. இது தொடர்பான உரிய ஆதாரங்களை யும் வழங்கியுள்ளோம். மனு மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தலைமை தேர்தல் அதிகாரி உறுதி அளித்துள்ளார்” எனத் தெரிவித்தார்.  விஜய பிரபாகரனின் மனுவை பரிசீலனை செய்து தேர்தல் ஆணையம் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில், விருதுநகர் மக்களவை தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வாய்ப்பில்லை என தேர்தல் ஆணைய அதிகாரிகள்  கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   தேர்தல் முடிவுகள்  அனைத்தும், குடியரசு தலைவரிடம் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால்,  அந்த  தேர்தல் ஆவணங்களை மீண்டும் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ள அதிகாரிகள்,  இதுபோன்ற நேரங்களில் தேர்தல் ஆணையம் விரும்பினாலும் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட முடியாது. ஆனால்,  தோல்வியடைந்த வேட்பாளர் நீதிமன்றத்தை நாடி தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.