சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 34,000 மாணவர்களுக்கு நவீன் தொழில்நுட்ப முறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்ந்த 22 ஆயிரம் மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 12 ஆயிரம் மாணவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) என்பது தமிழ்நாடு அரசின் தொழில்துறையின் கீழ் இயங்கும் தனி அமைப்பாகும். மாநிலத்தின் இளைஞர்களுக்கு தொழில் திறன்களை வளர்த்து, புதிதாக உருவாக்கும் வேலைவாய்ப்புகளுக்கு மாணவர்களுக்கான திறனை புகுத்துவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தி, தொழில்துறையின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற வகையில் திறன்களை வளர்த்து மாநிலத்தை திறன் மையமாக மாற்றும் நோக்குடன் உருவாக்கப்பட்டது.
2013 முதல், சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையின் கீழ் தனி அமைப்பாக இயங்கி வருகிறது. TNSDC, திறன் மேம்பாட்டுக்கான மாநிலத்தின் நோடல் ஏஜென்சியாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் பல்வேறு துறைகளில் திறன் தேவையை மதிப்பீடு செய்து, தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன் மேம்பாட்டு திட்டங்களை உருவாக்குகிறது.
அதன்படி, தமிழ்நாடு அரசின் “நான் முதல்வன்” திட்டத்தின் ஒரு பகுதியாக, மாணவர்களை தொழிற்துறை தேவைகளுக்கு ஏற்ப தயார்ப்படுத்துவதற்காக, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (Machine Learning), பிளாக்செயின் தொழில்நுட்பம் (Blockchain) போன்ற துறைகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் (TNSDC) ஆரக்கிள் நிறுவனம் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
மேலும், நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக ஐ.பி.எம், மைக்ரோசாப்ட், சேப், கூகுள், ஆரக்கல், இன்போசிஸ் போன்ற முன்னனி நிறுவனங்களின் மூலம் மாணவர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி பெறும் திட்டம் துவங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக oracle நிறுவனமும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது.
இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1.80 ஆயிரம் மாணவர்கள் oracle நிறுவனத்தின் மூலம் இந்த பயிற்சியை பெற்றுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், oracle நிறுவனம் மூலம் ஏ.ஐ. , இயந்திர கல்வி, பிளாக் செயின் உள்ளிட்ட திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த கூட்டணியின் மூலம், ஆரக்கிள் நிறுவனத்தின் உலகளாவிய தரம் வாய்ந்த பயிற்சி திட்டங்கள் மாநிலத்தின் இளைஞர்களுக்கு கிடைக்கும். இதன் மூலம், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங் போன்ற வளரும் தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டு மாணவர்கள் திறன்களைப் பெற்று, சர்வதேச வேலைவாய்ப்புகளுக்கு தகுதி பெற முடியும்.