டெல்லி: நீட் தேர்வு முடிவில் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து,  நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படுவதாகவும், அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என  உச்சநீதிமன்றத்தில் தேசிய தேர்வு முகமை தெரிவித்து உள்ளது. அதன்படி ஜூன் 23 அன்று மறுதேர்வு நடத்தப்பட உள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் மீண்டும் கோரிக்கையை எழுப்பி உள்ள நிலையில், பலர், ஏற்கனவே நடைபெற்ற தேர்வை ரத்து செய்துவிட்டு மறுதேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 63 வழக்குகள் தொடுக்கப்பட்டு உள்ளன. இந்த வழக்கின் விசாரணையின்போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான மத்தியஅரசின் வழக்கறிஞர்,  நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட 1563 மாணவர்களின் தேர்வு முடிவுகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது. மேலும் ரத்து செய்யப்பட்ட மாணவர்களுக்கு வரும் 23ந்தேதி மறு தேர்வு நடத்தப்பட்டு, ஜூன் 30ல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம்,  நீட் மறு தேர்வை நடத்திக் கொள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அனுமதி வழங்கியதுடன்,  கவுன்சிலிங் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட அறிவுறுத்தியதுடன்,   திட்டமிட்டபடி நீட்   கவுன்சிலிங் நடைபெறும் மற்றும் எந்த தடங்கலும் இருக்காது. தேர்வு தொடர்ந்தால், மற்ற அனைத்தும் தொடரும், எனவே எந்த கவலையும் இல்லை என்று கூறியதுடன், நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 2 வாரத்தில் பதில் அளிக்கவும் தேசிய தேர்வு முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

நீட் தேர்வின் புனிதத்தன்மை மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது! தேசிய தேர்வு முகமை