சென்னை:  மருத்துவ காரணத்துக்காக சவுக்கு சங்கர் இடைக்கால நிவாரணம் கோரினால், அதை  8 வாரங்களில் பரிசீலித்து தெரிவிக்க தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரபல அரசியல் விமர்சகரும், டிடியூபருமான சவுக்கு சங்கர் திமுக அரசு மீது அடுத்தடுத்து பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். அவர் சமீபத்தில்,  பெண் காவலர்கள், பெண் காவல் அதிகாரிகளை அவதூறாக பேசியதால், பெண் போலீசாரின் புகாரின் பேரில் காவல்துறை நள்ளிரவில் அவரை மே 4-ம் தேதி கைது செய்தனர்.  அதைத்தொடர்ந்து, அவர் மீது அடுத்தடுத்து 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் மே 12-ம் தேதி உத்தரவிட்டார். அதன்படி, புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரி அவரது தாய் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர். இதையடுத்து, அந்த வழக்கை விசாரித்த 3-வது நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், காவல் துறை தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை வேறொரு இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தார்.

அதன்படி, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன்  அமர்வு சவுக்கு சங்கர் வழக்கை விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று (ஜுன் 12ந்தேதி) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விஷயத்தில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதற்கு சவுக்கு சங்கர் வக்கீல் ஆட்சேபம் தெரிவித்தார். தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.

இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  சவுக்கு சங்கர் வழக்கை, வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி, உரிய வரிசைப்படியே விசாரிக்கப்படும். ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை முடிந்த பிறகே,  தமிழ்நாடு அரசு கூறிய பதில்  மனு இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து  மனுதாரர் தரப்பில் ஆஜரான வழங்கறிஞர்,  சவுக்கு சங்கர் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு  மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். அதனாலும், மேலும் சில காரணங்களுக்காகவும்  அவருக்கு  இடைக்கால நிவாரணமாக அவரை தற்காலிகமாக விடுவிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

இதற்கு அரசு வழக்கறிஞர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். மேலும்,  தற்போதைய சூழலில் அவரை விடுவிக்க இயலாது என்று கூறினார்.

இதையடுத்து,  கூறய நீதிபதிகள்,  மனுதாரர் மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால நிவாரணம் கோரி அரசிடம் மனு அளிக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், அந்த மனுவை தமிழக அரசு 8 வாரங்களில் பரிசீலித்து, தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.