புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

புவனேஸ்வரில் நடக்கும் விழாவில், ஒடிசாவில் முதல்வராக மோகன் மஜி பதவியேற்கிறார். மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் பிரதமர், மத்திய அமைச்சர்கள், பா.ஜ., ஆளும் மாநில முதல்வர்கள் கலந்து கொள்கின்றனர். பிஜூ ஜனதா தளத்தின் தலைவர் நவின் பட்நாயக்கிற்கும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

 மக்களவை தேர்தலுடன் ஒடிசா சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், மொத்தம் உள்ள 147 இடங்களில் பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஒடிசாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பிஜு ஜனதாதளம் கட்சியை பாஜக வீழ்த்தியது.  பிஜு ஜனதா தளம் 51 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் 14, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1 மற்றும் 3 சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் பதவி விலகினார்.

இதைத்தொடர்ந்து, முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புவனேஸ்வரில் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தின்போது முதல்வரை தேர்வு செய்யும் நிகழ்வில், கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங் மற்றும் பூபேந்திர யாதவ் ஆகியோருடன் அஷ்வினி வைஷ்ணவ், ஜுவால் ஓரம் ஆகியோரும் மேலிட பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

இதில் 4 முறை பாஜக எம்.எல்.ஏ.வான மோகன் மாஜி முதலமைச்சராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 52 வயதான மோகன் மாஜி கியோன்ஜார் தொகுதியில் 87,000 வாக்கு வித்தியாசத்தில் பிஜு ஜனதா தளத்தின் மினா மாஜியை தோற்கடித்தார்.

இதையடுத்து ஆட்சி அமைக்க மோகன் மாஜி கவர்னரிடம் உரிமை கோரினார். அதை ஏற்ற கவர்னர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து,
புதிய முதல்வர் மற்றும் அமைச்சரவையின் பதவியேற்பு விழா  இன்று மாலை 5 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க வருமாறு முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்துகொள்ள பிரதமர் நரேந்திர மோடி மதியம் 2:30 மணிக்கு புவனேஸ்வர் வந்து விமான நிலையத்தில் இருந்து ராஜ்பவனுக்கு செல்கிறார். பின்னர் மாலை 5 மணிக்கு ஜனதா மைதானத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

[youtube-feed feed=1]