மார்பக புற்றுநோய் cancer
சண்டிகார்
மனிதகுலத்தை அச்சுறுத்தும் புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு பல்வேறு நடவைக்கைகளை எடுத்துவருகிறது.40 வயது கடந்த பெண்கள் அனைவருக்கும் கட்டாயம் மார்பகப் புற்றுநோய்ப் பரிசோதனை செய்ய வேண்டும்  என அரசு மருத்துவமனைகளுக்கு பஞ்சாப் மாநில அரசு  உத்தரவிட்டுள்ளது.
பெண்களை மிரட்டும் ஆபத்தான நோய்களில் மார்பகப்புற்றுநோயும் ஒன்று. இதனை ஆரம்பத்தில் கண்டறிந்துவிட்டால் எளிதில் குணப்படுத்தி விடலாம்.எனவே இதற்கான பரிசோதனை நடவடிக்கைகளில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் ஈடுபட வேண்டுமென பஞ்சாப் அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில அரசின் சுகாதாரத்துறை செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:-
40 வயது கடந்த அனைத்துப் பெண்களுக்கும் மார்பகப்புற்று நோய் அறிகுறிகள் ஏதும் உள்ளதா? என்பதற்கான பரிசோதனைகளை அனைத்து அரசு மருத்துவமனைகளும் தாமாகவே முன்வந்து செய்ய வேண்டும். இதனால் மார்பகப்புற்றுநோயினை ஆரம்பத்திலேயே நாம் அடையாளம் கண்டு  சிகிச்சை அளிக்க முடியும். இத்துடன் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள் உள்ளதா? என்பதையும் இத்துடன் சேர்த்து பரிசோதனை செய்யவேண்டும்.
மார்பகப் புற்றுநோய், கர்ப்பப் பை வாய் நோய் புற்றுநோய், கருப்பை புற்றுநோய் ஆகியவை பெண்களிடமும், ஆண்களிடம் உணவுக்குழாய் புற்றுநோய், வாய்ப்புற்று நோய், விந்தக புற்றுநோய் ஆகிய நோய்களும்  பெருமளவில் காணப்படுகின்றன. எனவே இதுதொடர்பான பரிசோதனைகளை அரசு மருத்துவமனைகள் கட்டாயம் செய்யவேண்டும்.
பல் மருத்துவரிடம்  வெளிநோயாளியாக ஒருவர் சிகிச்சை பெற வந்தால்கூட அவரிடம் மேற்கண்ட நோய்களுக்கான ஆரம்ப அறிகுறிகளை கண்டறியும் பரிசோதனைகளை மருத்துவர்கள் மேற்கொள்ள வேண்டும். பஞ்சாப் மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் புற்றுநோய் தொடர்பான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வாறு வழங்கப்பட்டுள்ள உபகரணப்பட்டியல் ஒவ்வொரு மருத்துவமனையிலும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய்க்கு எதிராக பஞ்சாப் மாநில அரசு தீவிரம் காட்டிவருகிறது..  மாநிலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் சிகிச்சைக்காக முதலமைச்சர் நிவாரணநிதியிலிருந்து ஒவ்வொருவருக்கும் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.