திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே தனியார் பள்ளியின் பேருந்தில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று பள்ளி திறக்கப்பட்ட நிலையில், முதல்நாளிலேயே பள்ளி பேருந்தில் தீ விபத்து நடைபெற்றுள்ளது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், பள்ளி பேருந்துகளை ஆர்டிஓ அதிகாரிகள் சோதனை செய்வது வெறும் கண்துடைப்பா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் தனியார் மாநில கல்வி பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் இயங்குகின்றன. இவை, பள்ளிக்கு வரும் மாணவர்களை அழைத்து வர பேருந்துகள், வேன்களை இயக்கி வருகின்றன. இதுபோன்ற வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து வருகின்றன. மேலும் பல விபத்துக்களும் நடைபெற்றுள்ளன. இதையடுத்து, தமிழ்நாடு அரசு தனியார் பள்ளி வாகனங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளடன், அவ்வப்போது ஆர்டிஓ அதிகாரிகள் சோதன நடத்தவும் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக பள்ளிகள் திறப்பதற்கு முன்பு அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆர்டிஓ அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி கடந்த மாதமே மாநிலம் முழுவதும் தனியார் பள்ளிகளில் ஆர்டிஓ குழுவினர் சோதனை மற்றும் ஆய்வு செய்தனர்.
இநத் நிலையில், பள்ளி திறந்த முதல் நாளே திருவண்ணாமலையில் தனியார் பள்ளி வாகனம் ஒன்று நடுரோட்டில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பள்ளி குழந்தைகள் யாருக்கும் பாதிப்பில்லை. இருந்தாலும் இந்த பேருந்தை ஆய்வு செய்த ஆர்டிஓ குழுவினர் எப்படி ஆய்வு செய்தார்கள் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. உண்மையிலேயே அதிகாரிகள் ஆய்வு செய்கிறார்களா அல்லது ஆய்வு செய்வதுபோல நடிக்கிறார்களாக என சமுக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திருவண்ணாமலையில் பிரபலமானது ஆரஞ்ச் என்ற தனியார் பள்ளி. இதற்கு அண்டை மாவட்டங்களிலும் கிளைகள் உள்ளது. இந்த ஆரஞ்ச் பள்ளி சார்பில் மாணவ மாணவிகளை அழைத்து வர மினி பேருந்துஇயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி திறப்பையொட்டி இன்று காலை வழக்கம் போல் மாணவர்களின் வீடுகள் உள்ள பகுதிகளுக்கு சென்று அவர்களை ஏற்றிக்கொண்டு பள்ளி நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு பேருந்து திடீரென நடுரோட்டில் தீப்பிடித்தது. திருவண்ணாமலை அடுத்த நடுக்குப்பம் கிராமம் அருகே பேருந்து சென்று கொண்டிருந்த போது, திடீரென பேருந்தின் முன்புறம் புகை வருவதைக் கண்ட ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்து உடனே பேருந்தை நிறுத்தினார். அந்த பேருந்தில் 13 மாணவர்கள் மட்டுமே இருந்த நிலையில்,அவர்களை உடனடியாக வாகனத்தில் இருந்துகீழே இறக்கி நடவடிக்கை எடுத்தார். தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தசம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் மாணவர்கள் குறைந்த அளவிலேயே இருந்ததாலும், ஓட்டுநரின் சமயோசிததத்தாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளி துவங்கப்பட்ட முதல் நாளிலேயே பள்ளிப் பேருந்து தீப்பிடித்து எரிந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பள்ளி வாகனங்களை ஆய்வு செய்வதாக ஆர்டிஓ அதிகாரிகள் நாடகமாடி, பணத்தை வசூலிப்பதாக விமர்சித்து வருகின்றனர்.