சென்னை: மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலையில் கவனம் செலுத்தி, மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துள்ளுங்கள் என பெற்றோர்களுக்கும், ஆசிரியர் களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.

கோடை விடுமுறை முடிந்து இன்று (ஜுன் 10ந்தேதி) மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளன. இதன் காரணமாக இன்று காலை முதலே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவச் செல்வங்களுடன் பெற்றோர்களும் வந்து தங்களது குழந்தைகளை பள்ளியில் விட்டு சென்றனர். பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்கள், இனிப்புகளும், மலர் செண்டுகளும் கொடுத்து வரவேற்றனர்.

பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், இன்றே புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே பள்ளிகளுக்கு பாடப்புத்தங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், முதல்நாளிலேயே புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,  கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திரும்பும் குழந்தைகள் அனைவருக்கும் இக்கல்வியாண்டு இனிதே அமைய வாழ்த்துகிறேன்! பெற்றோர்களும், ஆசிரியர்களும் மீண்டும் வகுப்பறைக்குள் அடியெடுத்து வைக்கும் மாணவச் செல்வங்களின் மனநிலை – உடல்நிலை ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வாசிப்பிலும் விளையாட்டிலும் மாணவர்களுக்கு ஊக்கமூட்டி மகிழ்ச்சியோடு இருக்கும்படி பார்த்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.