சென்னை: அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 79,500 பேருக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டு வருகிறது. நான் முதல்வன் திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களும், பயிற்சி வகுப்புகளும் வழங்கப்படுவதுடன் மேலும் பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு உள்ளன. அத்துடன்,  :தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ‘ஹைடெக் லேப்’ என்ற, கணினி ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கணினி இணைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளது.

இதன்மூலம் ஆசிரியர்கள்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழி பாடங்கள் நடத்தி வருகின்றனர். இதற்காக , ஆசிரியர்களுக்கான ஆன்லைன் வழி பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்களுக்கு   ‘டேப்லெட்’ என்ற கையடக்க கணினி வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி  வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது.

அதன்படி, மாநிலம் முழுவதும் பணியாற்றி வரும்   79,500 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக   கையடக்க கணினிகள் கொள்முதல் செய்யப்பட்டு, மாவட்ட வாரியாக கல்வி அதிகாரிகளுக்கு அனுப்புப்பட உள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்றுத் தரும் திறனை மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்களுக்கு கையடக்கக் கணினி வழங்கப்படுகிறது. 30,744 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. 2547 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்ட ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024-25 கல்வியாண்டில் 1920 கூடுதல் வகுப்பறைகள், 251 புதிய ஆய்வகங்கள், அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த கையடக்க கணினியை கொண்டு, ஆசிரியர், மாணவர் வருகைப்பதிவு, ஆசிரியர்களுக்கான பணி பயிற்சி, மாணவர்களுக்கு வீடியோ பாடங்களை காட்டுவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும்,  இந்த கையடக்க கணினி திருட்டு போனால், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளிக்கல்வித் துறை எச்சரித்துள்ளது.