சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலையம் அமைக்க மேலும் 147 ஏக்கர் நிலம் கையப்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு  அரசாணை வெளியிட்டு உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமைவழி விமான நிலையம் அமைக்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கு போதுமான வசதிகள் இல்லாததால், புதிய விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம்   பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடமானது, சென்னையில் இருந்து சுமார்   70 கிமீ தொலைவில் இருக்கிறது.  இங்கு  3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் அது 6ஆயிரம் ஏக்கராக மாற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து, “பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் உள்பட  20 கிராமங்களில் 5,746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான அரசாணையை கடந்த 2023ம் ஆண்டு தமிழ்நாடு அரசு வெளியிட்டது. விமான நிலையம் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்து நிலங்களை கையகப்படுத்தும் அறிவிப்பையும் வெளியிட்டது. அதன்படி,  பரந்தூர் மட்டுமின்றி அருகே பல கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட உள்ளது. இது தொடர்பாக வளத்தூர், தண்டலூர், ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் நில அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அந்த பகுதி கிராம மக்கள் கடந்த இரு ஆண்டுகளாக போராடி வந்தனர். ஆனால், அவர்களின் போராட்டத்தை தமிழ்நாடு அரசு காவல்துறையை கொண்டு அடக்கியது. மேலும், அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் அங்கு செல்ல முடியாதவாறு தடை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அங்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தற்போது, பரந்தூர் விமான நிலையத்திற்கு மேலும் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. அதன்படி, பரந்துரை அடுத்துள்ள  எடையார்பாக்கம் கிராமத்தில் 147.11 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி ஆணை வெளியிட்டது. ஆட்சேபனை அல்லது கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என தெரிக்கப்பட்டு உள்ளது.

நிலம் குறித்த பாத்தியத்தை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தனி மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளிக்கலாம். ஆட்சேபனைகள் மீதான விசாரணை ஜூலை மாதம் 22 மற்றும் 23-ம் தேதி மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.