திரைப்பட நட்சத்திரமும், ஹிமாச்சல், மண்டியில் இருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.யுமான கங்கனா ரனாவத் மீது தாக்குதல் நடத்திய சிஐஎஸ்எஃப் பெண் காவலர் மீது 323 மற்றும் 341 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் நடைபெறும் பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று சண்டிகர் சர்வதேச விமான நிலையம் வந்த கங்கனா ரனாவத்-திடம் சிஐஎஸ்எஃப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

விவசாயிகள் போராட்டத்தின் போது விவசாயிகளை கொச்சைப் படுத்தும் விதமாக பாஜக-வினருக்கே உரிய பாணியில் கங்கனா ரனாவத் சைகையுடன் பேசியிருந்தார்.

இதுகுறித்து கங்கனா ரனாவத்திடம் குல்விந்தர் கவுர் கேள்வி எழுப்பினார் இதுவக்குவாதமாக முற்றிய நிலையில் கங்கனா ரனாவத் கன்னத்தில் குல்விந்தர் கவுர் அறைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தை அடுத்து மூத்த சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து கங்கனாவிடம் விளக்கம் அளித்தனர். பெண் காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கங்கனா கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து குல்விந்தர் கவுர் இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்த நிலையில், குல்விந்தர் கவுர் மீது IPC 323 மற்றும் 341 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய பிரிவு என்பது குறிப்பிடத்தக்கது.