நாடாளுமன்ற மற்றும் ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றிபெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் தலைநகர் அமராவதியில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதல்வராக சந்திரபாபு நாயுடு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே பேசிய தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, “ஜனநாயகத்தையும் மாநில நலனையும் காக்கும் வகையில் செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

மேலும், “இதற்கு முன் முதலமைச்சரை பார்க்க முடியாமல் மக்கள் பிரதிநிதிகள் அதிகாரிகளிடம் மட்டுமே தங்கள் கோரிக்கைகளை கூறிவந்தனர்”

“இனி, அப்படி இருக்காது நீங்கள் புதிய சந்திரபாபு நாயுடுவை பார்க்க உள்ளீர்கள். மக்கள் பிரச்சனைக்காக என்னை எந்த நேரத்திலும் அணுகலாம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநில முதல்வராக ஜூன் 11ம் தேதி பதவியேற்க உள்ள சந்திரபாபு நாயுடு தனது பதிவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருமாறு நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அதேவேளையில், மோடி பிரதமராக பதவியேற்பதற்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவு அளித்திருப்பதற்கு அம்மாநில அமைப்புகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.