சென்னை: 18வது மக்களவைக்கான தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளை மொத்தமாக அள்ளியிருந்தால், அக்கட்சியின் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. இது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

18வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று, வாக்கு எண்ணிக்கையும் ஜூன் 4ந்தேதி நடத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில், பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி அதிக இடங்களை பிடித்திருந்தாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜக 240 தொகுதிகளில் வெற்றிபெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன்  ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள், புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகள் கொண்ட இந்த மக்களவைத் தேர்தலில், திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டி என்றே கட்சிகள் களம் கண்டன.

இண்டியாக கூட்டணியின் வெற்றிக்கு தென்மாநிலங்களின் வெற்றி பெரிதும் கைகொடுத்துள்ளது.   இருந்தாலும் தமிழ்நாட்டில்,  கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலைவிட, இந்த தேர்தலில் திமுக கூட்டணி மட்டுமல்லாது தனிப்பட்ட முறையில் கூட்டணியில் உள்ள கட்சிகளின் வாக்கு சதவீதமும் குறைந்துள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில், திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட 8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. அப்போது, 38 தொகுதிகளில் வெற்றி பெற்று, 53 சதவீதம் வாக்குகளைப் பெற்றது.

இந்த தேர்தலிலும் கடந்த தேர்தலைப்போல அதே  8 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.  ஆனால்,  திமுக கூட்டணி 46.97 சதவீதம் வாக்குகளை  மட்டுமே பெற்றுள்ளது. திமுக கூட்டணியின் வாக்கு சதவிகிதம் 6 சதவிகிதம் குறைந்துள்ளது. 

திமுக மட்டும்,  கடந்த 2019-ல் 33.53 சதவீதம் வாக்குகள் பெற்ற  நிலையில், இந்த தேர்தலில் 26.93 சதவீதமே பெற்றுள்ளது. அதாவது 6.6 சதவிகிதம் குறைந்துள்ளது.

அதுபோல கடந்த தேர்தலில், 12.72 சதவீதம் பெற்ற காங்கிரஸ் தற்போது 10.67 சதவீதம் பெற்றுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் 2.41 சதவீதத்துக்கு பதில் 2.15 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளன.

 கடந்த முறை 2.38 சதவீதம் வாக்குகள் பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தற்போது 2.52 சதவீதம் பெற்றுள்ளது.

ஐயுஎம்எல் கடந்த முறையைப் போல் தற்போதும் 1.1 சதவீதமும் வாக்குகளை பெற்றுள்ளது.

விசிக பொறுத்தவரை, கடந்த முறை 1.17 சதவீதம் வாக்குகள் பெற்ற நிலையில், இந்த தேர்தலில் 2.25 சதவீதமாக அதிகரித்துள்ளது.

மதிமுகவை பொறுத்தவரை, இந்ததேர்தலில் 1.24 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது.

அதிமுக  இந்த தேர்தலில்  20.46% வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த 2019 தேர்தலில் 30.28 வாக்குகளை பெற்ற நிலையில், தற்போது பெரும் சரிவை கண்டுள்ளது. இதற்கு காரணம் கட்சி பிளவு பட்ட தே என கூறப்படுகிறது.

அதுபோல கடந்த 2019 மக்களவை தேர்தலில்  அதிமுக கூட்டணியில் பா.ஜ.க. 3.66 சதவீதம், தே.மு.தி.க. 2.19, பா.ம.க. 5.42 சதவீதம் ஓட்டுக்களைப் பெற்றிருந்தன. ஆனால், இந்த தேர்தலில் அக்கட்சிகளின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளது.

பாஜக  இந்த தேர்தலில்  11.24% வாக்குகளை பெற்று, தனது அஸ்திவாரத்தை பலப்படுத்தி உள்ளது. அதுபோல பல இடங்களில் இரண்டாவது இடத்தை பெற்று, தமிழ் நாட்டின் எதிர்க்கட்சியாகும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

நாம் தமிழர் – 8.19%,   பாமக – 4.4%, தேமுதிக – 2.59%, இந்திய கம்யூனிஸ்டு கட்சி – 2.15%, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – 2.5% வாக்குகள் பெற்றுள்ளன.

தமிழகத்தில்  வாக்கு குறைவுக்கு காரணம், திமுக அரசின் கட்டண உயர்வுகளே என்று கூறப்படுகிறது. ஒருபுறம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 இலவசம், மாணவ மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவசமாக ரு.1000 என பல சலுகைகளை வழங்கினால், மற்றொருபுறம் பெரும்பலான துறைகளில் கட்டண உயர்வை அமல்படுத்தி உள்ளது. பழைய ஓய்வூதியம் அமல்படுத்தாது, நீட் விலக்கில் ஏமாற்றம்,  அரசு ஊழியர்கள் அதிருப்தி, மின் கட்டணம், பதிவுக் கட்டணம், சொத்து, வீட்டுவரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மக்களும் அதிருப்தியில்  உள்ளதால்,  திமுகவின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வாங்கு வங்கி சரிவு திமுக தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.