சென்னை

இந்தியா கூட்டணியின் வெற்றி சர்வாதிகாரத்துக்கு கடிவாளம் போட்டுள்ளது என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்-அமைச்சரும், அக்கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

அந்தக் கடித்ததில் முதல்வர் மு க ஸ்டாலின்

”அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றிக்களத்தின் நன்றி மடல்.மகத்தான வெற்றியை தி.மு.க.வுக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். வெற்றிக்கு அயராமல் உழைத்தவர்கள் தொண்டர்களாகிய நீங்களும்தான். தமிழ்நாடு, புதுச்சேரியில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சியினரின் பங்களிப்புடன் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.இந்த மாபெரும் வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவுமே திரும்பிப் பார்க்கிறது. அதன் மூலம் நாட்டை வழிநடத்தும் ஆற்றலுடன் செயல்படவும் முடியும் என்பதை மக்களவைத் தேர்தல் முடிவுகள் எடுத்துக் காட்டியிருக்கின்றன.

மக்களின் ஆன்மீக நம்பிக்கைகளை அரசியல் சுயலாபத்துக்குப் பயன்படுத்த நினைக்கும் மதவாத சக்திகளை, கோவில் கட்டிய மண்ணிலேயே இறைநம்பிக்கையுள்ள வாக்காளர்கள் வீழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். சிறுபான்மை மக்களின் நெஞ்சில் இருந்த அச்ச உணர்வு நீங்கியிருக்கிறது. ஒற்றையாட்சி முறைக்கு மக்கள் ஆதரவாக இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

தமிழ்நாட்டிலும் இந்திய அளவிலும் இந்தியா கூட்டணிபெற்றுள்ள வெற்றியால் சர்வாதிகாரத்திற்குக் கடிவாளம் போடப்பட்டுள்ளது.ஜனநாயகத்தின் நம்பிக்கைத் துளிர்கள் அரும்பியுள்ளன. அரசியலமைப்பு வழங்கியுள்ள நெறிமுறைகளைப் பாதுகாக்கின்ற வகையில், நாட்டை வழிநடத்தும் பணியை இந்தியா கூட்டணி மேற்கொள்ளும். அதற்கு நாற்பதுக்கு நாற்பது என்ற மகத்தான வெற்றி பெருந்துணையாக இருக்கும்.”

என்று தெரிவித்துள்ளார்.