டெல்லி

க்களவை தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக தேசிய அளவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ். சமாஜ்வாடி, கம்யூனிஸ்டு கட்சிகள், தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து ‘இந்தியா கூட்டணி’ என்று ஓர் அணியை அமைத்தன. தமிழகத்தில் இந்த கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி ஆகியவை இடம் பெற்றன.

ஆளும் பா.ஜனதாவும் பீகார் முதல்-மந்திரி தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் பிரதமர் தேவேகவுடா தலைமையிலான மதசார்பற்ற ஜனதாதளம், மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் தலைமையிலான சிவசேனா, அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியை கட்டமைத்தது.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ம.க., அ.ம.மு.க., த.மா.கா., இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், புதியநீதிகட்சி, அ.தி. மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆகிய கட்சிகள் இடம் பெற்றன

பிரதமர் மோடி நாடு முழுவதும் சூறாவளியாக சுற்றுப்பயணம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டார். தமிழகத்துக்கும் பலமுறை வந்து பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியும், பிரியங்காவும் நாடு முழுவதும் பம்பரமாக சுழன்று பிரசாரத்தில் ஈடுபட்டனர். சோனியா காந்தி குறிப்பிட்ட சில இடங்களில் பிரசாரம் செய்தார். தேர்தல் பிரசாரத்தின் தாக்கம், கோடை வெயிலைவிட அனல் பறந்தது.

தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. ெபாதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாக்கு எண்ணிக்கை முடிவில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 292 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. பா.ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.  குறிப்பாக வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதேபோல் குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் 7½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அமேதி தொகுதியில் போட்டியிட்ட மத்திய மந்திரி ஸ்மிருதி இரானி காங்கிரஸ் வேட்பாளர் கே.எல்.சர்மாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 231 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தனது கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பாஜக மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது.