டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ஸ்மிதி இரானி, ராஜீவ்சந்திரசேகர் உள்பட 13 மத்திய அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இது பாஜகவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட நிலையில், வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டன. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்றது . இண்டியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி உள்ள 40 தொகுதிகளிலும் ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், மத்தியில் ஆட்சி செய்து வந்த பாஜக, பல அமைச்சர்களை இந்த தேர்தலில் களமிறக்கியது. அதில், முக்கியமான அமேதி தொகுதியில் மீண்டும் ஸ்மிரிதி ராணி களமிறங்கினார். இவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட அழைப்பு விடுத்தார். ஆனால், இவர் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளார்.
தமிழ்நாட்டின் நீலகிரி தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் திமுகவின் ஆ.ராஜாவிடம் தோல்வியடைந்தார்.
மேலும், கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் சசி தரூருக்கு எதிராக மத்திய மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சா் ராஜீவ் சந்திரசேகா் போட்டியிட்டாா். வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் சசி தரூரைவிட 24,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்துடன் சந்திரகேசா் முன்னிலை வகித்தாா். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியபோதிலும், இறுதியில் சசி தரூரிடம் 16,077 வாக்குகள் வித்தியாசத்தில் சந்திரசேகா் தோல்வியடைந்தாா்.
அதுபோல, கடந்த 2021ம் ஆண்டு உ.பி. லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தின்போது கார் மோதி 4 விவசாயிகள் உயிரிழந்தனா். இதைத்தொடா்ந்து அங்கு வன்முறை ஏற்பட்டது. விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா இருந்து தெரிய வந்தது. அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், உத்தர பிரதேசத்தின் கெரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில் தோல்வி அடைந்தார். அதுபோல, ஜாா்க்கண்ட் மாநிலம் குந்தி தொகுதியில் மத்திய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் அா்ஜுன் முண்டா தோல்வியை சந்தித்தார்.
மோகன்லால்கஞ்ச் தொகுதியில், மத்திய இணை அமைச்சர் கவுஷல் கிஷோர் சமாஜ்வாதி கட்சியின் ஆர்.கே. சௌத்ரியிடம் தோல்வி அடைந்தார்.
சண்டௌலி தொகுதியில் மத்திய இணைஅமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, எஸ்பியின் பிரேந்திர சிங்கிடம் தோல்வியடைந்தார்.
பங்குரா தொகுதியில் மத்திய இணைஅமைச்சர் சுபாஸ் சர்க்கார் திரிணாமுல் காங்கிரசின் அருப் சக்ரவர்த்தியிடம் தோல்வியடைந்தார்.
பிதர் சுபாஸ் சர்க்கார் பக்வந்த் குபாவை சாகர் காந்த்ரே தோற்கடித்தார்.
ராஜஸ்தானின் பார்மரில் மத்திய இணைஅமைச்சர் கைலாஷ் சவுத்ரி மூன்றாவது இடம் பிடித்தார்.
கூச் பெஹார் தொகுதியில் டிஎம்சியின் ஜெகதீஷ் சந்திர பசுனியாவிடம் நிசித் பிரமானிக் தோல்வியடைந்தார்.
முசாபர்நகர் தொகுதியில், எஸ்பியின் ஹரேந்திர சிங் மாலிக்கிடம் மத்தியஇணைஅமைச்சர் சஞ்சீவ் பல்யான் தோல்வியடைந்தார்.
மொத்தம் 13 மத்திய அமைச்சர்கள் இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.