சென்னை: தமிழ்நாட்டில் ஜூன் 6ந்தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும், வரும்  7ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் எனவும் கூறினார்.

தேர்தல் நடத்தை விதிமுறைகளால் வணிகர்கள் உள்பட பலதரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், அதை விலக்குவது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

 

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது.  இதையொட்டி, 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது.  அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.

மேலும்,   18வது மக்களவைக்கான தேர்தல்  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக  நடைபெற்று முடிந்தது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெற்ற நிலையில், அனைத்து தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முடிவடைந்து  உள்ளது. இதன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் எப்போது விலக்கிக் கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை   தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ,  “தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தற்போது வரை எந்த விதமான புகாரும் வரவில்லை. நெல்லையில் தபால் வாக்குகள் செல்லாது என்ற புகார் குறித்து தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறியதுடன்,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் வரும் 6-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பிறகு விலக்கிக் கொள்ளப்படும் என்றும்  கூறினார்.