ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் சந்திரபாபு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.
175 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திர சட்டமன்றத்தில் 135 இடங்களில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றிபெற்றுள்ளது.
தவிர, நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 25 இடங்களில் 16 இடங்களை வென்றுள்ளது.
தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக 8 சட்டமன்ற தொகுதியிலும் 3 நாடாளுமன்ற தொகுதியிலும் வெற்றிபெற்றுள்ளது.
மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு தேவைப்படும் நிலையில் சந்திரபாபு நாயுடு மீண்டும் தேசிய அளவில் பேசப்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், ஆந்திர மாநில முதல்வராக ஏற்கனவே மூன்று முறை (1995-99, 1999 – 2004, 2014-2019) பதவி வகித்த சந்திரபாபு நாயுடு தற்போது நான்காவது முறையாக மீண்டும் முதல்வர் பதவியேற்க உள்ளார்.
2021ம் ஆண்டு நவம்பர் மாதம் ஆந்திர சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து அவதூறான கருத்துகள் கூறப்பட்டதாக அவையில் இருந்து வெளியேறிய சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக தான் இந்த அவைக்கு வருவேன் என்று கூறியிருந்தார்.
1972ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தை புறக்கணித்த எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெயலலிதா, என்.டி.ஆர்., ஜெகன்மோகன் ரெட்டி என பலரும் இதேபோன்று சட்டசபையை புறக்கணித்த வரலாறு இருப்பது குறிப்பிடத்தக்கது.