திமுக-வின் இந்த வெற்றி இந்தியாவுக்கு வழியும் ஒளியும் காட்டக்கூடியது என்று நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த நடிகர் கமலஹாசன் அந்த கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக 40 தொகுதிகளையும் கைப்பற்றி உள்ள நிலையில் “இது திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழ்நாட்டில் அறுவடை செய்திருக்கிறது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், “மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
இந்தியாவைக் காக்கும் போரில், திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும். மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும். எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி இந்தியாவிற்கு வழியும், ஒளியும் காட்டக் கூடியவை.
இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக. தமிழ் வெல்க” என்று குறிப்பிட்டுள்ளார்.