டெல்லி: 18வது மக்களவைக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மதியம் 12.30 மணிநிலவரப்படி தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி பெரும்பாலானா தொகுதிகளை கைப்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளன.
18வது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் 542 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் தலைவிதி இன்று தீர்மானிக்கப்படுகிறது. முதலில் தபால் ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து இவிஎம் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.
543 இடங்களைக் கொண்ட மக்களவையில், ஆட்சி அமைக்க 272 தொகுதிகளில் வெற்றிபெற்றிருக்க வேண்டும். அதற்கான போட்டிகள் நிலவி வருகிறது. 543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதுபோல காங்கிரஸ் தலைமையிலான இண்டியாக கூட்டணி 228 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதில், பாஜக மட்டும் 242 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இந்திய தேசிய காங்கிரஸ் 94 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சி – SP 34 தொகுதிகளிலும், அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்றக் கழகம் – திமுக 21 தொகுதிகளிலும், தெலுங்கு தேசம் – TDP 16 தொகுதிகளிலும், ஜனதா தளம் (யுனைடெட்) – ஜனதா தளம் (யு) 15 தொகுதிகளிலும், சிவசேனா (உத்தவ் பாலாசாகேப் தாக்ரே) – 10 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார் – NCPSP 8 தொகுதிகளிலும், . சிவசேனா 6 தொகுதிகளிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) – LJPRV 5 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – சிபிஐ(எம்) 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.
பாஜக மட்டும் 272 தொகுதிகளில் வெற்றிபெற்றால், தனித்தே ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்படாது.
மக்களவை தேர்தல் 2024 முடிவுகள்: தமிழகம்
திமுக கூட்டணி – 38
அதிமுக கூட்டணி- 1 (விருதுநகர் – தேமுதிக)
பாஜக கூட்டணி – 1 (தருமபுரி – பாமக)