சென்னை: நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலுமே தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில், அதிமுக கட்சி 4வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி, பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி என 3 பிரதான கூட்டணி போட்டியிட்ட நிலையில், நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டது. கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் இருந்த பா.ஜ.க, பா.ம.க, மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இந்த தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கு சென்றுவிட்டது. அதனால் இந்த தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க மட்டுமே பிரதான கட்சியாக இடம் பெற்றுள்ளது.
அ.தி.மு.க தலைமையிலான இந்த கூட்டணியில், புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ, மற்றும் தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளனர் இதில் அ.தி.மு.க 32 தொகுதிகளிலும், புதிய தமிழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சிகள் தலா ஒரு இடத்திலும், தே.மு.தி.க 5 இடங்களிலும் போட்டியிட்டது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் அ.தி.மு.க, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை ஆகிய 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தில் தொடர்ந்து வருகிறது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, புதுச்சேரி தொகுதிகளில் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வேலூர், நீலகிரி, கோவை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகளில் அ.தி.மு.க 3-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதுபோல, விளவங்காடு இடைத்தேர்தலிலும் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சி தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2014-ம் ஆண்டு தனித்து போட்டியிட்ட அ.தி.மு.க 45 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. இதன் மூலம் மக்களவை தேர்தலில் ஒரு கட்சி அதிகபட்ச வாக்குகள் வாங்கியது இதுவே முதல்முறையாகும் அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின் 2017 ஆர்.கே நகர் இடைத்தேர்தல், 2019 மக்களவை தேர்தல், 2021 தமிழக சட்டமன்ற தேர்தல், 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்துள்ளது.