சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 துணைத்தேர்வுக்கான அட்டவனையை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.  அதன்படி ஜூன் 24ந்தேதி முதல் தேர்வுகள் தொடங்குகின்றன. பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைதேர்வு அட்டவணையை தமிழ்நாடு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் மே – 6ம் தேதி வெளியானது. இதில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில், 5.44% மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாக பள்ளிக் கல்வி தேர்வுத் துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பொதுத் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மே – 16ம் தேதி முதல் ஜூன் – 1ம் தேதி வரை கால அவகாசம் விடுக்கப்பட்டது. இதையடுத்து, காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தனித்தேர்வர்கள் மாவட்ட இ-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் எனவும் பள்ளிக் கல்வி தேர்வுத்துறை சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் 24ம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வி தேர்வுத்துறை அறிவித்திருந்தது.

இந்தத் துணைத் தேர்வு நடைபெறும் நாட்கள் குறித்த அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 24ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு, , ஜூன் 25ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு ஜூன் 26, 27, 28, 29, மற்றும் ஜூலை 1, 3, 4, 5, 6,8,9 ஆகிய நாட்கள் வரை தேர்வுகள் நடத்தப்படவிருப்பதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.