இந்தியா கூட்டணியின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணிக்கு 264 தொகுதிகள் கிடைக்கும் என்று அக்னி நியூஸ் வெளியிட்டுள்ள கணிப்பு கூறியுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 330க்கும் கூடுதலான இடங்கள் கிடைக்கும் என்றும் அதில் பாரதிய ஜனதா எந்த ஒரு கூட்டணி கட்சியின் தயவும் இல்லாமல் ஆட்சி அமைக்க தேவையான இடங்களில் வெற்றிபெறும் என்று பல்வேறு ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டது.
கடந்த 2019 தேர்தலில் பாஜக கூட்டணி 353 இடங்களில் வெற்றிபெற்ற நிலையில் உ.பி., பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த முறை வென்றதை விட கணிசமான இடங்களை பாஜக இழக்கக்கூடும் என்று அதே கருத்துக்கணிப்புகளில் மாநில வாரியாக வெளியாகியுள்ள தரவுகளில் தெரிவித்துள்ளது.
இருந்தபோதும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற கருத்துக்கணிப்பு இந்தியா கூட்டணி கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே அதிருப்தியையும் வாக்கு எண்ணும் முகவர்களிடையே மனச்சோர்வையும் ஏற்படுத்த இந்த ஊடகங்களை பாஜக பயன்படுத்தி வருவதாக விமர்சிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா கூட்டணி 264 இடங்களில் வெற்றிபெறும் என்றும் இதனால் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அக்னி நியூஸ் தனது கருத்துக்கணிப்பில் கூறியுள்ளது.
பாஜக அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து 242 இடங்களில் மட்டுமே வெற்றிபெறும் என்றும் அது கூறியுள்ளது.
330+ என்று மற்ற கருத்துக்கணிப்புகள் தெரிவித்த நிலையில் பாஜக அதை விட கூடுதலாக 70 இடங்கள் அதாவது 400 இடங்களில் வெற்றிபெறும் என்று பாஜக தலைவர்கள் தங்களுக்கு சாதகமாக கூறிவருகின்றனர்.
இந்த நிலையில் அக்னி நியூஸ் கருத்துக்கணிப்பு 330ல் இருந்து சுமார் 80 சீட்டுகள் குறைவாக அதாவது 242 சீட்டுகள் மட்டுமே பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்று கணித்துள்ளது.
58 தொகுதிகளில் நடைபெற்ற 7ம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நேற்று முடிவடைந்த சில நிமிடங்களில் வெளியான இந்த கருத்துக்கணிப்புகள், ஓட்டுப்போட்டு வெளியில் வந்த நபர்களிடம் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்ற ஒற்றை கேள்வியை மட்டுமே வைத்து எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்பதை உணரமுடிகிறது.
அவர்களின் பதிலில் உள்ள நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த மேலும் எந்த ஒரு கேள்வியும் எழுப்பப்பட்டதாகவோ அல்லது சராசரியாக 15 லட்சம் வாக்காளர்கள் கொண்ட ஒரு நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை நபரிடம் கருத்து கேட்கப்பட்டது என்றோ அல்லது என்ன வழிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது என்றோ இந்த கருத்துக்கணிப்பு நடத்திய முகவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
ஆறப்பொறுக்காமல் வெளியாகியுள்ள இந்த கருத்துக்கணிப்புகள் மக்களின் மனநிலையை பிரதிபலித்ததா என்பது ஜூன் 4ம் தேதி துவங்கும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையும் போதே தெரியவரும்.