பூரி

பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா பூரி ஜெகந்நாதர் குறித்து தவறாக பேசியதற்கு வருத்தம் தெரிவித்து 3 நாட்கள் விர்ஹம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

நேற்று ஒடிசா மாநிலம் பூரி மக்களவை தொகுதி பா.ஜனதா வேட்பாளர் சம்பித் பத்ரா, செய்தியாளர்களிடம், “பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்” என்று கூறினார். ஆனால் அவர் “மோடி பூரி ஜென்நாதரின் பக்தர்” என்று கூறுவதற்கு பதிலாக தவறுதலாக அவ்வாறு கூறிவிட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. ஆயினும் அவரது கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தனது ‘எக்ஸ்’ தளத்தில்,

“மகாபிரபு ஸ்ரீ ஜெகன்நாதர் இந்த பிரபஞ்சத்தின் கடவுள். அவரை ஒரு மனிதரின் பக்தர் என்று கூறுவது மிகப்பெரிய அவதூறாகும். இது மிகவும் கண்டனத்திற்குரியது. இந்த கருத்து உலகம் முழுவதும் உள்ள ஜெகன்நாதரின் பக்தர்களுடைய மனதை புண்படுத்தியுள்ளது. பூரி ஜெகன்நாதர் ஒடிசாவின் பெருமைக்குரிய அடையாளம் ஆவார். அரசியலுக்குள் கடவுளை இழுக்க வேண்டாம் என பா.ஜனதாவிடம் கேட்டுக்கொள்கிறேன்”

என்று பதிவிட்டார்.

மேலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரும் சம்பித் பத்ராவின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையொட்டி சம்பித் பத்ரா தனது ‘எக்ஸ்’ தளத்தில்,

“நான் தவறுதலாக கூறிய கருத்துக்கு பூரி ஜென்நாதரின் பாதம் பணிந்து மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தவறுக்காக அடுத்த 3 நாட்கள் நான் விரதம் இருக்கப் போகிறேன்”

என்று பதிவிட்டுள்ளார்.