கொல்கத்தா: நான் ஆர்.எஸ்.எஸ்-ஐ சேர்ந்தவன்தான் என ஓய்வு பெறும் நாளில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஷ் பேசியதுடன், நான் என் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாததால், நான் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு தைரியம் இருக்கிறது. ஏனென்றால் அதுவும் தவறு அல்ல ” என்றும் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், 20ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியை விடுவித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சித்தரஞ்சன் தாஷ். அத்துடன் இதுபோன்ற பாலியல் சட்ட சிக்கல்களை தவிர்ப்பதற்காக பள்ளிக் கூடங்களில் வளர் இளம் (விடலை) பருவ வயதினருக்கு ஒருங்கிணைந்த பாலியல் (செக்ஸ்) கல்வி கல்வி வழங்க வேண்டும் என அதிரடி உத்தரவிட்டார்.
மேலும், இளம் பெண்கள் தங்கள் உடல் ஒழுக்கத்தையும் கண்ணியத்தையும் சுய மரியாதையையும் காப்பாற்றிக் கொள்வது அவர்களின் கடமையாகும். அதே நேரத்தில இளைஞர்கள் பெண்களின் கண்ணியம், மரியாதையை மதிக்கும் மனநிலைக்கு மாற வேண்டும் என்றும் அறிவுறுத்தியதுடன், குறிப்பாக விடலை பருவ பெண்கள் இரண்டு நிமிட இன்பத்துக்கு ஆசைப்பட்டு விடாமல் பால் உணர்வுகளை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்து இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கிய நீதிபதி இரண்டு நிமிட இன்பத்திற்கு ஆசைப்பட்டால் அதனால் இழப்பு உங்களுக்குத் தான் என்பதையும் தெளிவுபடுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இவர் பணிக்காலம் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிமன்ற வளாகத்தில் அவருக்கு பிரிவுபசார விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சித்தரஞ்சன் தாஸ் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என ஓப்பனாக தெரிவித்தார். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த விழாவில் உரையாற்றி நீதிபதி சித்த ரஞ்சன் தாஷ் பேசுகையில், “சில நபர்களின் வெறுப்புக்கு, நான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினராக இருந்தேன், இருக்கிறேன் என்பதை இங்கே ஒப்புக்கொள்ள வேண்டும். தன்னை வளர்த்த ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நான் நிறைய கடன்பட்டிருக்கிறேன். நான் என் குழந்தை பருவத்தில் இருந்து எனது இளமைக்காவலம் முழுவதும் அதில் இருந்தேன். நான் தைரியமாகவும், நேர்மையாகவும், மற்றவர்களுக்கு சமமான பார்வையைக் கொண்டிருக்கவும், எல்லாவற்றிற்கும் மேலாக தேசபக்தி மற்றும் வேலைக்கான அர்ப்பணிப்பு உணர்வை அங்கு கற்றுக்கொண்டேன்.
எனது தொழில் வாழ்க்கையின் எந்தவொரு முன்னேற்றத்துக்கும், எனது உறுப்பினர் பதவியை நான் ஒருபோதும் பயன்படுத்தவில்லை. ஏனெனில் அது, அதன் கொள்கைகளுக்கு எதிரானது. நீதிபதியாக எனக்கு முன் அனைவரும் சமம். நான் யாருடனும் அல்லது எந்தவொரு குறிப்பிட்ட அரசியல் தத்துவத்துக்கும் அல்லது அமைப்புக்கும் எந்த சார்பையும் கொண்டிருக்கவில்லை.
நான் என் வாழ்க்கையில் எந்த தவறும் செய்யாததால், நான் அந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்ல எனக்கு தைரியம் இருக்கிறது. ஏனென்றால் அதுவும் தவறு அல்ல ” என்று கூறியதுடன், தான் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கின் (ஆர்எஸ்எஸ்) உறுப்பினர் என்று அழைக்கப்பட்டால், “அந்த அமைப்புக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகவும்” தெரிவித்தார்.
1962-ம் ஆண்டு ஒடிசாவின் சோனேபூரில் பிறந்த சித்த ரஞ்சன் தாஷ், உள்ளுண்டாவில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். அதைத் தொடர்ந்து தேன்கனல், புவனேசுவரத்தில் உயர் கல்வி பயின்றார். 1985-ல் கட்டாக்கில் சட்டப் படிப்பில் பட்டம் பெற்றார். 1986-ம் ஆண்டு தாஷ், தனது வழக்கறிஞர் வாழ்க்கையைத் தொடங்கினார். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் இணையதள தகவலின்படி, 1992 முதல் 1994 வரை மாநில அரசின் கூடுதல் வழக்கறிஞராகப் பணியாற்றினார். 1999 பிப்ரவரியில், சித்த ரஞ்சன் தாஷ், ஒடிசா உயர் நீதித்துறை சேவையில் நேரடி சேர்ப்பில் (மூத்த கிளை) இடம்பெற்றார். கடந்த 2009 அக்டோபரில் ஒடிசா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், கடந்த 2022 ஜூன் 20-ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று, நேற்று (மே 20ந்தேதி) பணி ஓய்வு பெற்றார்.