சென்னை: அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏதும் கிடையாது என்று  செய்தியாளர்களின் கேள்விக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்  எஸ்.பி. வேலுமணி  பதில்அளித்தார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , அதிமுக முன்னாள் அமைச்சர், ஜெயக்குமார்கூட, ‘எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அதற்கு செங்கோட்டையன் பொறுப்புக்கு வர வேண்டும்’ என சொன்னதாக செய்திகள் பத்திரிகைகளிலேயே வந்துள்ளது. அதனால், அந்த கட்சியில் மிகப்பெரிய பிளவு உண்டாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதனை நாங்கள் செய்ய மாட்டோம். பாஜக செய்யும்” என கூறினார்.  இதைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியும்,  செங்கோட்டையனும் தனியாக செயல்படுவதாக செய்திகள் பரவி வருகின்றன. இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து,  கருத்து தெரிவித்து, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “எனது 45 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இதுவரை நான் நேர் வழியில் சென்றுள்ளேன். இது மாற்றுக் கட்சியினருக்கும் தெரியும். ஆனால் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கும் கருத்து கண்டிக்க கூடியது. பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை புரிந்து இது போன்ற கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். இதுபோன்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு முன் சிந்தித்து செயல்படுவதுதான் அவரை போன்ற அரசியல்வாதிக்கு ஏதுவாக அமையும் என சாடியிருந்தார்.

அதுபோல,  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, “2 கோடி தொண்டர்களை கொண்டு வலிமையுள்ள இயக்கமாக அ.தி.மு.க.வை வெற்றிகர மாக எடப்பாடியார் நடத்தி வருகிறார். இதை பொறுக்க முடியாமல் இதை எதிர்கொள்ள முடியாமல் வாய்க்கொழுப்புடன் சிலர் புரளி பேசி வருகிறார்கள். வாய்க்கு வந்ததை உளறி வரும் பைத்தியக்காரர்கள் போல பேசி வருகின்றனர்’’ என்றவர்,  “அ.தி.மு.க.வில் இருந்த பொழுது அ.தி.மு.க.வின் பாலை குடித்துவிட்டு, தற்போது தி.மு.க.வுக்கு சென்றவுடன் அங்கு அ.தி.மு.க.விற்கு எதிராக விஷப்பாலை கக்குவது மிகப்பெரும் பாவச்செயலாகும். அ.தி.மு.க.வில் எந்த இடைவெளியும் இல்லை. பிளவும் இல்லை’’ எனக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த  அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ் பி வேலுமணி,  அதிமுக உலகத்திலேயே 7வது கட்சி. இந்தியாவில் மிகப்பெரிய கட்சி. எனக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் பிளவு என எழுதுகின்றனர். எங்களுக்குள் எந்த குழப்பமும் கிடையாது. குழப்பம் செய்தவர்கள் எல்லாம் வெளியே போய்விட்டனர் என்றார்.

இதுபோன்ற தவறான செய்திகளை, திமுக ஐடி குழுவினர்  பரப்புவதாகவும், அதனை ஊடகங்களும் செய்திகளாக பதிவிடுகின்றன,  பல ஊடகங்கள் கற்பனையாக செய்திகளை வெளியிடுகின்றன. கட்சியையும் ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்தி காப்பாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. கட்சிக்குள் எந்த பிரச்னை வந்தாலும், அனைத்து மூத்த நிர்வாகிகளிடமும் கலந்து ஆலோசித்த பின்பு, எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவும் எடுப்பார் என்றார்.

திமுகவின் 3ஆண்டுகால ஆட்சி குறித்த கேள்விக்கு பதில் கூறியவர், திமுக  ஆட்சியின் கடந்த மூன்று ஆண்டு திமுக ஆட்சியில் எந்த திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியை பொறுப்பு ஏற்ற, உடன் மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்றார்.