சென்னை: திமுகவின் ஆபாச பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடிகை ராதிகா தரப்பில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.  புகாரின் பேரில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்குமா என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

திமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் முக்கியமானவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. அவரது ஆபாச பேச்சை ஒரு தரப்பினரும் கண்டித்தாலும் திமுக தொண்டர்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்கின்றனர். இதனால், அவரது பேச்சு எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. ஏற்கனவே  தமிழக ஆளுநர் குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்து தகாத வார்த்தைகளில் பேசிய திமுக தலைமைக் கழகப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவரை  தமிழக அரசின் காவல்துறை கைது செய்து செய்து சிறையில் அடைத்த நிலையில், ஓரிரு நாளில் விடுதலை செய்தது. இதைத்தொடர்ந்து, அவரை  திமுக  கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்து டிஸ்மிஸ் செய்தது. பின்னர் மீண்டும், அவரை கட்சியில் சேர்த்து பிரசாரம் செய்து வருகிறார்.

இவர் சமீபத்தில்  நடிகை ராதிகா குறித்து அவதுாறாக பேசிய பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு ராதிகா கடுமையான கண்டனம் தெரிவித்தநிலையில், சமூக ஆர்வலர்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். பெண்கள் குறித்து தரக்குறைவாக பேசிய சவுக்கு சங்கரை கைது செய்த காவல்துறை, தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கமிஷனர் அலுவலகத்தில்  , நடிகை ராதிகாவின் மேலாளர் நடேசன் அளித்த புகார் அளித்துள்ளார். அவரது புகார் மனுவில்,  லோக்சபா தேர்தலில், விருதுநகர் தொகுதி பா.ஜ., வேட்பாளராக நடிகை ராதிகா போட்டியிட்டார். ஏப்ரல், 15ல், காஞ்சிபுரம் தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட செல்வம் என்பவருக்கு ஆதரவாக, பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஓட்டு சேகரித்தார். அப்போது, நடிகையும் வேட்பாளருமான ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமார் ஆகியோரை மிகவும் இழிவாக பேசியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவருடைய சுய லாபத்திற்காகவும், விளம்பரத்திற்காகவும், ராதிகா, சரத்குமார் பற்றி மக்களிடையே அவதுாறு பரப்பி வருகிறார். எனவே, தி.மு.க., பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.