டெல்லி: மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர் குழுவில் சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் நியமனம் செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதாவது, மதுரை, தோப்பூரில் 222 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2018 டிசம்பரில் ஒப்புதல் அளித்து 2019 ஜனவரியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து, அரசியல் மற்றும் சட்ட பிரச்சினைகளால், எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்காமல் இழுத்தடுக்கப்பட்டு வந்தது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்காக திட்ட மதிப்பீடு ரூ.1977.8 கோடி என மதிப்பிடப்பட்டது. இதற்கு, . ஜப்பான் பன்னாட்டு ஜெய்க்கா நிதி நிறுவனம் 82 சதவீதம் வீதம் வழங்கும் ரூ.1627.70 கோடி கடனுக்கு 2021 மார்ச்சில் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதற்கிடையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிர்வாக குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தற்போது, மதுரை எய்ம்ஸ் நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் உறுப்பினரா சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடியும் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய கல்விக்குழு உறுப்பினராகவும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாக உறுப்பினர்கள் குழுவில் ஒரு உறுப்பினராகவும் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி நியமிக்கப் படுகிறார். அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனச் சட்டம் 1956, பிரிவு 6 விதிகளின்படி இந்த நியமனம் செய்யப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.