விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் திரவுபதி அம்மன் கோயில் திறந்து திருவிழா நடத்த  ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில் இந்து சமய அறநிலையத்துறை,  திருவிழா நடத்த தடை  விதித்துள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி திருவிழா நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்து உள்ளது. இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. 500க்கும் மேற்பட்ட  போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளர்

மரக்காணம், தர்மாபுரி வீதியில் அமைந்துள்ளது திரவுபதி அம்மன் கோயில். இக்கோயில் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாத பஞ்சமி திதியன்று கொடியேற்றத்துடன் தொடங்குவது வழக்கம். தொடர்ச்சியாக 22 நாட்களுக்கு மகாபாரதம் நிகழ்ச்சிகளை வலியுறுத்தும் வகையில் திருவிழா நடத்தப்படும். இந்த திருவிழா இப்பகுதி பொதுமக்களால் நடத்தப்படுவது வழக்கம்.

இந்த பகுதியில் இரு தரப்பு மக்களிடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருவதால்,  கடந்த ஆண்டு கோயிலை இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்ல வேண்டும் என சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி கோயிலை இந்து அறநிலையத்துறை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. ஆனால், இதற்கு அந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. தொடர்ந்து,  நீதிமன்ற உத்தரவின்பேரில் பாதுகாப்புடன்  கடந்த ஆண்டு வழக்கம் போல் 22 நாள் திருவிழாவை பொதுமக்கள் நடத்தினர்.

இந்தநிலையில், இந்த ஆண்டு  திருவிழா நடத்த முடிவு செய்த அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், சித்திரை மாத பஞ்சமி திதியன்று தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிட்டதால் அன்று வழக்கம்போல் கொடியேற்று விழா நடத்தவில்லை.

இதனிடையே இப்பகுதி பொதுமக்களின் சார்பில் கோயிலின் பாரம்பரிய தர்மகத்தா மன்னாதன் கடந்த 7-ம் தேதி கோயில் திருவிழாவை வழக்கம்போல் நடத்த அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கோயில் திருவிழா வழக்கம்போல் நடத்திக் கொள்ளலாம் என கடந்த 9ம் தேதி தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் கடந்த 12 ம் தேதி கொடியேற்றம் நடத்தி திருவிழாவை தொடங்க அப்பகுதி பொதுமக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.

ஆனால், கோயில் திருவிழாவை நடத்தக்கூடாது என நீதிமன்ற உத்தரவை மீறி  இந்து அறநிலையத்துறை திடீரென   தடைவிதித்தது. இது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து, அங்கு 500க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது,   பொதுமக்கள், “நீதிமன்ற உத்தரவு படி தான் நாங்கள் திருவிழா நடத்த முடிவு செய்துள்ளோம்” எனக் கூறினர். அதற்கு அரசு அதிகாரிகள் “நீதிமன்ற உத்தரவு நகலை எங்களிடம் காட்டிவிட்டு திருவிழா நடத்திக் கொள்ளலாம்” என கூறினர். இதனை ஏற்று பொதுமக்கள் நீதிமன்ற உத்தரவை காட்டினர். பின்னர், நேற்று,  நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கொடியேற்றம் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் பொதுமக்கள் செய்தனர்.

ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள் காவல்துறையினருடன் வந்து,  “நீங்கள் கொடியேற்று விழா நடத்தக்கூடாது” என்று  தடைபோட்டனர். இதனால் மீண்டும் சலசலப்பு எழுந்தது.

இதையடுத்து, திரவுபதி அம்மன் கோயில் திருவிழா நடத்த விசிக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து இருப்பதால், தடை போடப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  அப்போது, இதுவரை 22 நாள் விழாவை பல சமூகங்களை சேர்ந்தவர்கள் வழக்கமாக நடத்தி வந்தீர்கள். ஆனால், திருவிழாவில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களுக்கும் உரிமை கொடுக்க வேண்டும் என விசிக சார்பில் இந்து அறநிலையத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் விசிக கோரிக்கைபடி பட்டியல் இன மக்களுக்கு ஒரு நாள் திருவிழா நடத்த அனுமதி கொடுத்தால், நீங்கள் வழக்கம் போல் திருவிழா நடத்த அனுமதிப்போம்” என்று  அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் கொடியேற்றம் நடக்காமல் தடைபட்டு நின்றது.  இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து அசம்பாவிதங்களைத் தடுக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் மரக்காணத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.