திண்டுக்கல்: கொடைக்கானலில் மலர் 61வது மலர் கண்காட்சி தொடங்கியது. பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கண்டு சுற்றுப்பயணிகள் வியந்தனர். அதே வேளையில் மலர் கண்காட்சியை பார்வையிட வசூலிக்கப்படும் கட்டணம் இரு மடங்கு உயர்ந்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிர்ததுள்ளனர்.
ஊட்டி, கொடைக்கானல் பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் வர இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு வழக்கமான சுற்றுலா பயணிகளை விட குறைந்த அளவே சுற்றுலா பயணிகள் வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஊட்டி மலர் கண்காட்சியை காணவும் எதிர்பார்த்த அளவுக்கு சுற்றுலா பயணிகள் வராத நிலையில், தற்போது கொடைக்கானல் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகளை வருவதை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், இந்த ஆண்டிற்கான 61வது மலர் கண்காட்சி கெசாடைக்கானலில் இன்று (மே 17) துவங்கியது. 10 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியானது அங்குள்ள பிரையண்ட் பூங்காவில் நடைபெற்று வருகிறது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சியில், சேவல், மயில், 360 டிகிரி செல்ஃபி பாயிண்ட், வீடு, பொம்மைகள், நெருப்புக்கோழி, காய்கறிகளில் டிராகன், கொரிலா, டெடி பியர் உள்ளிட்ட உருவங்கள் மலர்களால் வடிவமைக்கப்பட்டு, பார்வைக்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் பல வண்ணங்களில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மலர் கண்காட்சியை, வேளாண்மை உற்பத்தி ஆணையர் அபூர்வா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார். மேலும், இந்த மலர் கண்காட்சி துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர் பூங்கொடி மற்றும் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆகியோரும் கலந்து கொண்டனர். வரும் 26 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு கிளி, நெருப்புக்கோழி,சேவல்,மயில்,கரடி போன்றவை உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 2.50 லட்சம் மலர்ச் செடிகள் பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கி உள்ளன. வேளாண்,தோட்டக்கலை மற்றும் அரசின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள், மலர் கண்காட்சிக்கு வந்து மலர்களைக் கண்டு ரசித்தனர்.
இந்த வருடம் மலர் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியைப் பார்வையிட பெரியவர்களுக்கு 75 ரூபாயும் 10 வயதுக்குக் கீழ் உள்ள சிறியவர்களுக்கு 35 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மாற்றுத்திறனாளிகள் இலவசமாக பார்வையிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை பார்வையிடலாம். கடந்த ஆண்டைவிட நுழைவுக் கட்டணம் இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.