சென்னை: காவல்துறையினரை தரக்குறைவாக விமர்சனம் செய்த வழக்கு உள்பட 7 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள  சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவல் மே 28ந்தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பிரபல சவுக்கு மீடியா பத்திரிகையாளரும்,  யூ-ட்யூபர் சவுக்கு சங்கரை கடந்த மே 4ஆம் தேதி கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர்  தேனியில்  வைத்து நள்ளிரவு கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.இந்நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் மட்டும் காவல் வழங்கி அனுமதி அளித்தார்.

அதனைத் தொடர்ந்து  நேற்று மாலையுடன் சவுக்கு சங்கரின் காவல் முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலீசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும்படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

இதற்கிடையில் சவுக்கு சங்கரின் காரில் கஞ்சா இருப்பதாக கூறி மேலும் ஒரு வழக்கை காவல்துறையினர் பதிவு செய்தனர். தொடர்ந்து அவரது பழைய வீடியோக்களில் கூறிய கருத்துக்களை குறிப்பிபட்டு அடுத்தடுத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கிடையில், தமிழக முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி,பத்திரிகையாளர் சந்தியா ஆகியோர் சவுக்கு சங்கர் மீது புகார் அளித்திருந்தனர். இந்த புகாரை தொடர்ந்து சென்னை சைபர் கிரைம் போலீசார் ஏற்கனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்து அது தொடர்பாக அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டனர். சவுக்கு சங்கர் மீது திருச்சி காவல்துறையினரும் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து சிஎம்டிஏ உடைய ஆவணங்களை போலியாக தயாரித்து அது தொடர்பாக உண்மைக்கு புறம்பான செய்திகளை சவுக்கு சங்கர் வெளியிட்டதாக சிஎம்டிஏ அதிகாரிகள் கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மொத்தம் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தொடர்ந்து அவரது சென்னை மதுரவாயில் வீட்டிலும், தி.நகரில் உள்ள சவுக்கு மீடியா அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் கஞ்சா அடைக்கப்பட்ட சிகரெட்கள், இரண்டு லட்சம் ரூபாய், ஹார்ட் டிஸ்குகள், லேப்டாப் மற்றும் சில ஆவணங்களை போலீசாரால் கைப்பற்றப்பட்டது. இதன்பேரிலும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையிலும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து அவர் மீது  மே 12  குண்டாஸ் சட்டம் பாய்ந்ததும் குறிப்பிடத்தக்கது.