சென்னை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் மற்றும் விமான நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவைகள்   இன்று முழுவதும் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக  மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.

சென்னை மாநகர மக்களின் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் சேவை இருந்து வருகிறது.  போக்குவரத்து நெரிசல் மிக்க சென்னையில், எந்தவித பரபரப்பும்  இன்றி விரைவாக அலுவலகங்கள் மற்றும் பணிகளுக்கு செல்ல மெட்ரோ ரயில் சேவை பேரூதவியாக இருந்து வருகிறது. மெட்ரோ ரயிலின் விரைவான சேவை காரணமாக பெரும்பாலான பயணிகளும் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி பல லட்சம் பேர் பயணிக்கும் வகையில் சென்னை மக்களிடையே மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் மவுசு கூடி வருகிறது. இதன் காரணமாக, மெட்ரோ ரயில் சேவை பல இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று அதிகாலை மெட்ரோ ரயில் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.  இன்று காலை மீனம்பாக்கம் விமான நிலையம் மற்றும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கிடையே திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் நீல வழியில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் இன்று நாள் முழுவதும் ரத்து செய்யப்படுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

விமான நிலையத்திற்கு பயணிக்கும் பயணிகள், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சென்று பின்னர் அங்கிருந்து விமான நிலையத்திற்கு பச்சை வழியில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை இயக்கப்படும் நீல வழி மற்றும் சென்ட்ரல் மெட்ரோ முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரை இயக்கப்படும் பச்சை வழி ஆகியவை வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறை சரி செய்ய தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் அதற்கேற்ப தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.