சென்னை: கடுமையான வெயில் காரணமாக, பகல் நேரங்களில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த தொழிலக பாதுகாப்பு இயக்ககம், அதை ஒரே நாளில் வாபஸ் பெற்றுள்ளது. வழக்கம்போல பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அக்னி வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆங்காங்கே சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால், தகிக்கும் வெயிலில் தொழிலாளர்களை பணியமர்த்துவதற்கு தமிழ்நாடு தொழிலக பாதுகாப்பு இயக்ககம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது. தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.
இது கட்டுமான நிறுவனங்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் பல நிறுவனங்கள் அரசின் கட்டுப்பாடுகளை மீறி பகல் நேரங்களிலும், கட்டுமான பணிகளை மேற்கொண்டது. மேலும், மெட்ரோ உள்பட அரசு கட்டுமான பணிகளிலும் தொய்வு ஏற்படும் என்பதால், அரசின் உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதற்கிடையில், ஆங்காங்கே கோடை மழையும் பெய்து வருவதால், பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.
இதன் காரணமாக, கட்டுமான நிறுவனங்கள், கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.. கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.